இந்தியாவுடன் ராணுவ உறவை பலப்படுத்த புதிய மசோதா - அமெரிக்கா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம்
July 17 , 2017 2752 days 1233 0
அடுத்த நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் பாதுகாப்புத் துறைக்கு ரூ. 40.3 லட்சம் கோடி ஒதுக்குவது தொடர்பான மசோதா அமெரிக்க நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபையில் நிறைவேறியது.
இந்தியாவுடனான ராணுவ ஒத்துழைப்பை மேலும் பலப்படுத்துவது தொடர்பான திருத்த மசோதாவும் நிறைவேறியது.
அமெரிக்காவில் வரும் அக்டோபர் 1-ம் தேதி அடுத்த நிதியாண்டு (2018) தொடங்குகிறது.
இதற்காக அமெரிக்க நாடாளுமன்றத்தில் ஏற்கெனவே பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.இதன் ஒரு பகுதியாக தேசிய பாதுகாப்பு ஒப்புதல் சட்ட மசோதா 2018 தாக்கல் செய்யப்பட்டது. பாதுகாப்புத் துறைக்கு ரூ.40.3 லட்சம் கோடி ஒதுக்க வகை செய்யும் இந்த மசோதா நிறைவேறியது.
இந்த மசோதாவின் ஒரு பகுதியாக இந்தியாவுடனான ராணுவ ஒத்துழைப்பை மேலும் பலப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்திய வம்சாவளியைச் சார்ந்த அமெரிக்க எம்.பி. அமி பேரா ஒரு திருத்த மசோதா கொண்டு வந்தார். இது குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.
இந்தியா, அமெரிக்கா இடையிலான பாதுகாப்புத் துறை ஒத்துழைப்பை பலப்படுத்துவது தொடர்பான வியூகங்களை அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சரும் வெளியுறவுத் துறை அமைச்சரும் வகுக்க இந்த மசோதா வகை செய்கிறது. இதற்காக 180 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
அடுத்தபடியாக இந்த மசோதா அமெரிக்க நாடாளுமன்றத்தின் செனட் சபையில் (மேலவை) நிறைவேற வேண்டும். அதன் பிறகு அதிபரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படும்.