இரண்டாம் கட்ட தட்டம்மை ரூபெல்லா தடுப்பூசி முகாம்: 3.4 கோடி குழந்தைகளுக்கு செலுத்த இலக்கு
August 8 , 2017 2715 days 1101 0
இரண்டாம் கட்ட தட்டம்மை ரூபெல்லா தடுப்பூசி முகாமை மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் துவக்கியுள்ளது . இந்த முகாமில், 3.4 கோடி குழந்தைகளுக்கு அந்தத் தடுப்பூசியை செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஆந்திரப் பிரதேசம், சண்டிகர், ஹிமாசலப் பிரதேசம், கேரளம், தெலுங்கானா, உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களிலும், தாத்ரா-நாகர் ஹவேலி, டாமன்-டையூ ஆகிய யூனியன் பிரதேசங்களிலும் இந்த இரண்டாம் கட்ட தட்டம்மை ரூபெல்லா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்படவுள்ளன.
முதல் கட்டமாக, தமிழ்நாடு, கர்நாடகம் ஆகிய மாநிலங்களிலும், கோவா, லட்சத்தீவு, புதுச்சேரி ஆகிய யூனியன் பிரதேசங்களிலும் நடைபெற்ற தட்டம்மை ரூபெல்லா தடுப்பூசி முகாமில்3 கோடி குழந்தைகளுக்கு தடுப்பூசி போடப்பட்டது. இது, தடுப்பூசி போடுவதற்குரிய வயதுக் குழந்தைகளின் எண்ணிக்கையில் 97 சதவீதமாகும்.
பல கட்டங்களாக நடத்தப்படும் இந்த முகாம்களில், 9 மாதக் குழந்தைகள் முதல் 15 வயதுக்குற்பட்ட சிறுவர்கள் வரை, மொத்தம் 41 கோடி பேருக்கு தட்டம்மை ரூபெல்லா தடுப்பூசி போடத் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த முகாம்களைத் தொடர்ந்து, தற்போது 9-இல் இருந்து 12 மாதங்களுக்குள் ஒரு முறையும், 16-இல் இருந்து 24 மாதங்களுக்கு ஒருமுறையும் வழங்கப்பட்டு வரும் தட்டம்மை தடுப்பூசிகளுக்குப் பதிலாக, தட்டம்மை ரூபெல்லா தடுப்பூசிகள் போடுவது வழக்கமாக்கப்படும்.
தட்டம்மை மற்றும் ரூபெல்லா நோய்களுக்கு எதிரான எதிர்ப்பு சக்தியை குழந்தைகளிடம் உருவாக்கி, அந்த இரு நோய்களையும் ஒழித்துக்கட்டுவதே இந்த முகாம்களின் நோக்கமாகும்.