உச்ச நீதிமன்ற 45ஆவது தலைமை நீதிபதியாக தீபக் மிஸ்ரா பதவியேற்பு
August 29 , 2017 2690 days 951 0
உச்ச நீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக தீபக் மிஸ்ரா பதவியேற்றார்.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த ஜே.எஸ். கேஹர் ஓய்வு பெற்றார். இதையடுத்து, புதிய தலைமை நீதிபதியாக மூத்த நீதிபதி தீபக் மிஸ்ரா அண்மையில் நியமிக்கப்பட்டார். அதன் படி, தில்லியில் குடியரசுத் தலைவர் மாளிகையில் உள்ள தர்பார் ஹாலில் நடைபெற்ற விழாவில், உச்ச நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக தீபக் மிஸ்ரா பதவியேற்றார். அவருக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
உச்ச நீதிமன்றத்தின் 45 ஆவது தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா ஆவார். வரும் 2018 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 2-ஆம் தேதி வரை அந்தப் பதவியை அவர் வகிப்பார்.
உச்ச நீதிமன்ற நீதிபதியாக தீபக் மிஸ்ரா பணியாற்றிய காலத்தில், பல்வேறு முக்கியத் தீர்ப்புகளை அளித்துள்ளார். தில்லியில் மருத்துவ மாணவி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டது தொடர்பான வழக்கில் 4 பேருக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை உறுதி செய்தது தொடர்பான தீர்ப்பு, திரையரங்குகளில் தேசிய கீதம் கட்டாயம் ஒளிபரப்ப வேண்டும் என்பது தொடர்பான தீர்ப்பு ஆகியவை அவற்றில் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.