பின்வரும் ஒப்பந்தங்களின் உறுப்பினர்கள் நாடுகளின் மாநாட்டின் (Conference of the Parties- COP) பல்வேறு அமர்வுகள் ஸ்விட்சர்லாந்தில் உள்ள ஜெனீவா சர்வதேச மாநாட்டு மையத்தில் நடைபெற்றது.
பேசல் ஒப்பந்தத்தின் 14வது உறுப்பினர் நாடுகளின் மாநாடு (BC COP-14)
ரோட்டர்டாம் ஒப்பந்தத்தின் 9வது உறுப்பினர் நாடுகளின் மாநாடு (RC COP-9 )
ஸ்டாக்ஹோம் ஒப்பந்தத்தின் 9வது உறுப்பினர் நாடுகளின் மாநாடு (SC COP-9)
இந்த மாநாட்டின் கருத்துருவானது, “தூய்மையான கோள், ஆரோக்கியமான மக்கள் : வேதிப்பொருட்கள் மற்றும் கழிவுகளின் சிறந்த மேலாண்மை” என்பதாகும்.
இந்த மாநாட்டில் நெகிழிக் கழிவுகளைக் கட்டுப்படுத்துவதற்கு 187 நாடுகள் உறுதியளித்தன. ஆனால் அமெரிக்கா இந்த உறுதியளிப்பில் பங்கேற்க மறுத்துவிட்டது.
Cop14-இல் தடைத் திருத்தத்தை நடைமுறைக்கு கொண்டு வருவதற்கான மூலோபாய கட்டமைப்பு மற்றும் அபாயகரமான கழிவுகள் மற்றும் இதரக் கழிவுகளின் தடுப்பு, குறைப்பு மற்றும் மீட்டெடுப்பு மீதான கார்டாஜீனா பிரகடனம் ஆகியவை உள்ளிட்ட ஒப்பந்தங்களை நடைமுறைப்படுத்துவது தொடர்பான விவகாரங்கள் உறுப்பினர்களிடையே விவாதிக்கப்பட்டன.
பேசல் ஒப்பந்தம்
இது அபாயகரமான கழிவுகளின் எல்லை தாண்டிய நகர்வுகளை கட்டுப்படுத்துதல் மற்றும் அவற்றின் வெளியேற்றம் மீதான பேசல் ஒப்பந்தம் எனவும் அறியப்படுகிறது.
இந்த சர்வதேச ஒப்பந்தமானது அபாயகரமான கழிவுகளானது எல்லைத் தாண்டிக் கொண்டு செல்வதைக் குறைப்பதையும் குறிப்பாக வளர்ச்சியடைந்த நாடுகளிலிருந்து குறைந்த வளர்ச்சியுடைய நாடுகளுக்கு அபாயகரமான கழிவுகள் இடமாற்றம் செய்யப்படுவதைத் தடுப்பதையும் குறிக்கோளாகக் கொண்டுள்ளது.
ரோட்டர்டாம் ஒப்பந்தம்
இது சர்வதேச அளவிலான வர்த்தகத்தில் சில அபாயகரமான வேதிப்பொருட்கள் மற்றும் பூச்சிக் கொல்லிகள் மீதாக முன்னரே அறிவிக்கப்பட்டு ஒப்புதல் அளிக்கப்பட்ட நடைமுறைகள் மீதான ரோட்டர்டாம் ஒப்பந்தம் எனவும் அறியப்படுகின்றது.
இது மனித ஆரோக்கியத்தையும் சுற்றுச்சுழலையும் தீங்கிலிருந்துப் பாதுகாப்பதற்காகவும் வேதிப்பொருட்களை சுற்றுச்சூழலுக்கு உகந்த முறையில் பயன்படுத்துவதற்காகவும் சில அபாயகரமான வேதிப்பொருட்களின் சர்வதேச வர்த்தகத்தில் பகிர்ந்தளிக்கப்பட்ட பொறுப்புகளையும் கூட்டுறவு முயற்சிகளையும் ஊக்குவிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
ஸ்டாக்ஹோம் ஒப்பந்தம்
இது நிலையான கரிம மாசுபடுத்திகளின் மீதான ஸ்டாக்ஹோம் ஒப்பந்தம் எனவும் அறியப்படுகிறது.
இந்த சர்வதேச ஒப்பந்தமானது நிலையான கரிம மாசுபடுத்திகளின் உற்பத்தி மற்றும் பயன்பாடுகளைக் கட்டுப்படுத்துவதை அல்லது அகற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.