உலக அளவில் துப்புரவின்மையால் உண்டாகும் பிரச்சனைகளைப் பற்றிய விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்துவதற்காக ஆண்டுதோறும் நவம்பர் 19-ஆம் தேதி ஐ.நா.வின் சர்வதேச உலக கழிவறை தினம் கடைப்பிடிக்கப்படுகின்றது.
2030-ல் அடைய இலக்கிடப்பட்டுள்ள நீடித்த மேம்பாட்டு இலக்குகளில் (SDG-Sustainable Development Goal) ஒன்றான SDG 6 ஆனது உலகிலுள்ள அனைவருக்குமான துப்புரவு மற்றும் சுகாதாரம், சுத்திரிக்கப்படாத கழிவுநீரின் விகிதத்தை பாதியாக குறைத்தல், மறுசுழற்சியை அதிகரித்தல் மற்றும் பாதுகாப்பான மறு பயன்பாடு என்ற இலக்கை கொண்டுள்ளது.
உலக கழிவறை தினமானது ஐ.நா.வின் தண்ணீர் அமைப்புடன் (UN Water) பல்வேறு நாடுகள் மற்றும் அமைப்புகளின் கூட்டிணைவால் ஒருங்கிணைக்கப்படுகின்றது.
2017ஆம் ஆண்டிற்கான உலக கழிவறை தினத்தின் கருத்துரு ”கழிவு நீர்” (Waste Water).
இந்தியாவும் சுகாதாரமும்
யுனிசெஃப் சர்வேயின் படி இந்தியாவில்தான் அதிகமான மக்கள் கழிப்பறை வசதியின்றி இருப்பதாகவும், இதற்கு அடுத்த இடத்தில் சீனா இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்தியாவில் தற்போது வரை கழிப்பிட வசதி இல்லாததால் சுமார் 60 கோடி பேர் திறந்தவெளியைப் பயன்படுத்துவதாக உலக வங்கி தெரிவித்துள்ளது.
யுனிசெஃப் அறிக்கையின்படி, உலக அளவில் ஒருநாளைக்கு போதிய கழிப்பிட வசதி இல்லாமல் நோய்வாய்ப்பட்டு 1000 குழந்தைகள் இறந்து போவதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. ஆறில் ஒரு பெண்குழந்தை பள்ளிகளில் கழிப்பிட வசதி இல்லாததால் படிப்பைத் தொடரமுடியாமல் பாதியிலேயே நிறுத்திவிடும் அவலம் இருப்பதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
உலக கழிவறை கழகம்
உலக கழிவறை கழகம் ஆனது உலகம் முழுவதும் கழிப்பறை பிரச்சனைக்குத் தீர்வு காண வழி வகுக்க 2001-ம் ஆண்டு நவம்பர் மாதம் 19-ம் தேதி தோற்றுவிக்கப்பட்ட ஓர் சர்வதேச அமைப்பு ஆகும்.
இதன் தலைமை அலுவலகம் சிங்கப்பூரில் உள்ளது.
ஜாக் சிம் என்பவரின் முயற்சியால் உருவாக்கப்பட்ட இந்த அமைப்பின் மூலம் உலகின் பல்வேறு நாடுகளின் கழிப்பறை குறித்த விழிப்புணர்வும், நவீன கழிப்பறைகள் கட்டுவதற்கான திட்டங்களும் வகுக்கப்படுகிறது.
இந்த ஆண்டு உலக கழிவறை தினத்தின் அடுத்த நாளன்று இந்த அமைப்பின் உலக கழிவறை மாநாடு ஆஸ்திரேலியாவின் மெல்பர்னில் நடைபெற உள்ளது.