பூமிக்கும், மனித குலத்திற்கும் இடையே சதுப்பு நிலங்களின் (Wet lands) மதிப்பைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஆண்டுதோறும் பிப்ரவரி இரண்டாம் தேதி உலக சதுப்பு நிலங்கள் தினம் (World Wetlands Day – WWD) கொண்டாடப்படுகின்றது.
நகரங்களை வாழத்தகு இடங்களாக உருவாக்குவதில் சதுப்புநிலங்கள் ஆற்றும் போற்றத்தகு பங்களிப்பை முன்னெடுத்து காட்டுவதற்காக “நீடித்த நகர்ப்புற எதிர்காலத்திற்கான சதுப்பு நிலங்கள்“ (Wetlands for a sustainable Urban Future) என்ற கருப்பொருளில் 2018ஆம் ஆண்டு உலக சதுப்பு நில தினம் கொண்டாடப்படுகின்றது.
ராம்சார் (Ramsar) என்ற ஈரானிய நகரில் 1971 ஆம் ஆண்டு பிப்ரவரி இரண்டாம் தேதி உலகிலுள்ள சதுப்புநிலங்களை பாதுகாப்பதற்காக ஓர் உலகளாவிய உடன்படிக்கை மேற்கொள்ளப்பட்டதை குறிக்கும் விதமாக ஆண்டுதோறும் பிப்ரவரி 2ஆம் தேதி உலக சதுப்பு நிலங்கள் தினம் கொண்டாடப்படுகின்றது.
1982 ஆம் ஆண்டிலிருந்து இந்தியா ராம்சார் உடன்படிக்கையின் (Ramsar Convention) உறுப்பினராக இருந்து வருகின்றது.
1997ஆம் ஆண்டு முதல் முறையாக உலக சதுப்புநிலங்கள் தினம் கொண்டாடப்பட்டது.
மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாறுபாட்டிற்கான அமைச்சகமானது சதுப்புநில பாதுகாப்பிற்கான இந்தியாவின் முதன்மை அமைச்சகமாகும்.