இரண்டாவது உலக நிலங்கள் கண்ணோட்ட அறிக்கையானது பாலைவனமாக்கலைத் தடுப்பதற்கான ஐக்கிய நாடுகள் சபையின் உடன்படிக்கை அமைப்பினால் (UNCCD) வெளியிடப் பட்டுள்ளது.
ஒன்பது கிரக எல்லைகள் தான் சுற்றுச்சூழல் எல்லைகளின் வரம்புகளாகும் என்ற நிலையில் அவை மனிதகுலத்திற்கானப் பாதுகாப்பான நடவடிக்கை மேற்கொள்ளும் பகுதியினை வரையறுக்கின்றன.
இவற்றுள் பருவநிலை மாற்றம், பல்லுயிர்ப் பெருக்க இழப்பு, நிலப் பயன்பாட்டில் மாற்றம் மற்றும் புவி வேதியியல் சுழற்சிகள் ஆகியவற்றின் வரம்புகள் ஏற்கனவே மீறப் பட்டுள்ளன.
இந்த வரம்பு மீறல்கள் மனித நடவடிக்கைகளால் தூண்டப்பட்டப் பாலைவனமாக்கல், நிலச் சீரழிவு மற்றும் வறட்சி ஆகியவற்றுடன் நேரடியாக தொடர்பு கொண்டுள்ளன.
பூமியின் நிலப்பரப்பினுடைய இயற்கையான நிலையில் இருந்து, 70 சதவீதத்திற்கும் அதிகமான நிலப்பரப்பினை மனிதர்கள் ஏற்கனவே மாற்றியமைத்துள்ளனர்.
இது புவி வெப்பமடைதல் மற்றும் சுற்றுச்சூழல் சீரழிவுக்கு குறிப்பிடத்தக்க அளவிலான பங்களிப்பினை அளித்துள்ளது.
இது வறுமை, பசி, சமத்துவமின்மை, விலங்கு வழியே பரவும் நோய்கள் போன்றவற்றின் அதிகரிப்புக்கு வழி வகுத்தது.
பயன்மிக்க விளைவுகளை அடைவதற்காக என்று நில மறுசீரமைப்புப் பணிகளுக்கான உலகளாவிய வருடாந்திரச் செலவினமானது 2030 ஆம் ஆண்டிற்குள் குறைந்தது 300 பில்லியன் டாலராக இருக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
மறுசீரமைப்பு நடவடிக்கைகளில் முதலீடு செய்யப்படும் ஒவ்வொரு டாலரும் 7 டாலர் முதல் 30 டாலர் வரையிலான பொருளாதாரப் பலனாக திரும்பக் கிடைக்கப் பெறும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
உலகளவில், 80% காடழிப்புக்கும், 70% நன்னீர்ப் பயன்பாட்டிற்கும் உணவு முறைகள் தான் காரணமாக உள்ளன.
நிலம் சார்ந்த பல்லுயிர்ப் பெருக்கத்தின் இழப்பிற்கு இது மிகப்பெரிய காரணமாகும்.
வெள்ளம், வறட்சி மற்றும் காட்டுத்தீ ஆகியவை நிலச் சீரழிவிற்கான சில பொதுவான சுற்றுச்சூழல் சார்ந்த சவால்கள் ஆகும்.
நிலம் மற்றும் சுற்றுச்சூழல் மறுசீரமைப்பானது புவி வெப்பமடைதல் செயல் முறையினைக் காலம் தாழ்த்த உதவுவதோடு வறட்சி, வெள்ளம் போன்ற பேரழிவுகளின் அளவையும், அவை மீண்டும் மீண்டும் உருவாகக் கூடிய வாய்ப்பினையும் குறைக்கும்.