உலக வானிலை அமைப்பானது (WMO) சமீபத்தில் தனது முதல் உலக நீர் வள அறிக்கையை வெளியிட்டது.
இது உலகின் நீர் வளங்களின் மீது சுற்றுச்சூழல், பருவநிலை மற்றும் சமூக மாற்றங்கள் ஆகியவற்றின் தாக்கத்தின் அளவினை மதிப்பிடுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
தேவை அதிகமாகவும், வழங்கீடு மிகக் குறைவாகவும் இருக்கும் சமயத்தில், உலகம் முழுவதும் உள்ள நன்னீர் வளங்களைக் கண்காணித்துத் திறம்பட மேலாண்மை செய்வதற்கு ஆதரவு வழங்குவதே இதன் நோக்கமாகும்.
2021 ஆம் ஆண்டில், ஆப்பிரிக்காவில் உள்ள நைஜர், வோல்டா, நைல் மற்றும் காங்கோ போன்ற ஆறுகள் இயல்பான நீரோட்டத்தினை விட குறைவான நீரோட்டத்தினையே சந்தித்தன.
அதே காலகட்டத்தில் ரஷ்யா, மேற்கு சைபீரியா மற்றும் மத்திய ஆசியாவின் பல பகுதிகளில் உள்ள ஆறுகளிலும் சராசரியை விட குறைவான நீரோட்டமே காணப் பட்டன.
சீனா, வட இந்தியா, மேற்கு ஐரோப்பா ஆகிய பகுதிகளில் தான் பெருமளவிலான வெள்ளப் பாதிப்பு நிகழ்வுகள் ஏற்பட்டன.
மொசாம்பிக், பிலிப்பைன்ஸ் மற்றும் இந்தோனேசியா போன்ற நாடுகள் வெப்ப மண்டலச் சூறாவளிகளால் பாதிக்கப் பட்டவையாகும்.
எத்தியோப்பியா, கென்யா மற்றும் சோமாலியா போன்ற நாடுகளில் தொடர்ந்து பல ஆண்டுகளாக சராசரிக்கும் குறைவான மழைப் பொழிவே பதிவாகின.
2021 ஆம் ஆண்டில், அமெரிக்காவின் மேற்குக் கடற்கரை, தென் அமெரிக்காவின் மத்தியப் பகுதி மற்றும் படகோனியா, வட ஆப்பிரிக்கா மற்றும் மடகாஸ்கர், மத்திய ஆசியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகள், பாகிஸ்தான் மற்றும் வட இந்தியா போன்ற இடங்களில் நிலப்பரப்பு நீர்ச் சேமிப்பு இயல்பை விட குறைவாக இருந்தது.
ஆண்டுகள் செல்லச் செல்ல, பல இடங்களில் உள்ள நிலத்தடி நீர்ச் சேமிப்பில் எதிர் மறையானப் போக்குகள் ஏற்படும் என எதிர்பார்க்கப் படுகிறது.
இவற்றுள் பிரேசில் நாட்டில் உள்ள ரியோ சாவோ பிரான்சிஸ்கோ நதிப்படுகை, படகோனியா, கங்கை மற்றும் சிந்து ஆகிய நதிகளின் மூல நீர் ஆதாரங்கள் மற்றும் தென் மேற்கு அமெரிக்கா ஆகியவை அடங்கும்.
நேர்மறையானப் போக்கினை விட எதிர்மறையானப் போக்குகள் மிகவும் வலிமை ஆனவையாக உள்ளது.