உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து மகளிர் ஒற்றையர் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்றார்.
ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடைபெற்ற இறுதிச்சுற்றில், ஜப்பானின் நஜோமி ஒகுஹராவை எதிர்கொண்ட சிந்து வீழ்ந்தார்.
உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் இறுதிச் சுற்றுக்கு சிந்து முன்னேறியது இது முதல் முறையாகும். தற்போது இறுதிச் சுற்று வரை முன்னேறியதன் மூலம், உலக சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதிச் சுற்றுக்கு முன்னேறிய 2 ஆவது இந்தியர் என்ற பெருமையை சிந்து பெற்றுள்ளார்.
முதல் இந்தியராக, சாய்னா நெவால் ஜகார்த்தாவில் நடைபெற்ற கடந்த சாம்பியன்ஷிப்பில் இறுதிச் சுற்று வரை முன்னேறினார்.
இதனிடையே, இந்த உலக சாம்பியின்ஷிப் போட்டியில் இந்தியாவுக்கு சாய்னா ஒரு வெண்கலம் பெற்றுத் தந்துள்ள நிலையில், சிந்து ஒரு வெள்ளியை வென்று தந்துள்ளார்.
உலக சாம்பியன்ஷிப்பில் இந்தியா 2 பதக்கங்களைப் பெறுவதும் இது முதல் முறையாகும்.