ஐ.நா-வின் நீடித்த மேம்பாட்டுத் தீர்வைப் பிணைய (United Nations Sustainable Development Solutions Network – UN SDSN) அமைப்பால் அண்மையில் வெளியிடப்பட்ட 2018-ஆம் ஆண்டிற்கான உலக மகிழ்ச்சி அறிக்கையில் 156 நாடுகளுள் இந்தியா 133-வது இடத்தைப் பிடித்துள்ளது.
2012-ஆம் ஆண்டு முதன் முதலாக வெளியிடப்பட்ட உலக மகிழ்ச்சி அறிக்கையின் 6-வது பதிப்பு இவ்வாண்டு வெளியிடப்பட்டுள்ளது.
சார்க் நாடுகளுள் 145-வது இடத்தில் உள்ள ஆப்கானிஸ்தானைத் தவிர பிற அனைத்து சார்க் உறுப்பு நாடுகளும் இந்தியாவைக் காட்டிலும் முன்னிடத்தில் தரவரிசையைப் பெற்றுள்ளன.
இந்தியாவின் அண்டை நாடுகளான பூடான் 97-வது இடத்திலும், வங்கதேசம் 115-வது இடத்திலும், நேபாளம் 101-வது இடத்திலும், இலங்கை 116-வது இடத்திலும், பாகிஸ்தான் 75-வது இடத்திலும் உள்ளன.
சமத்துவமின்மை (Inequality) ஆயுள் எதிர்பார்ப்பு (life expectancy) தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி, சமூக சுதந்திரம், பொது நம்பிக்கை, சமூக ஆதரவு, உயர் பண்புடைமை (generosity) போன்ற பல்வேறு அளவுருக்களின் அடிப்படையில் 156 நாடுகள் உலக மகிழ்ச்சி அறிக்கையில் மதிப்பிடப்பட்டுள்ளன.
பின்லாந்து, நார்வே, டென்மார்க், ஐஸ்லாந்து, சுவிட்சர்லாந்து, நெதர்லாந்து, கனடா, நியூசிலாந்து, சுவீடன், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் முதல் 10 இடங்களில் உள்ளன.
இந்த அறிக்கையில் மகிழ்ச்சியான குடியேறிகள் (Happiest immigrants) உடைய நாடுகள், பொதுவாக மகிழ்ச்சியான மக்கள்தொகை உடைய நாடுகள் எனும் இருவகைப் பிரிவின் தரவரிசையிலும், பின்லாந்து முதல் இடத்தில் உள்ளது.
இந்த அளவுருக்களின் பயன்பாட்டைக் கொண்டு 1 முதல் 10 வரையிலான மதிப்பெண் அளவீட்டின் மீது உலக நாடுகளின் மகிழ்ச்சி மதிப்பெண்கள் (Happy Scores) கணக்கிடப்பட்டுள்ளன.
2018-ஆம் ஆண்டிற்கான உலக மகிழ்ச்சி அறிக்கையில் முதல் முறையாக 117 நாடுகளில் உள்ள அயல்நாட்டில் பிறந்த குடியேறிகளின் மகிழ்ச்சி கணக்கிடப்பட்டுள்ளது.
உலக நாடுகளின் மகிழ்ச்சி நிலை குறித்த ஒட்டுமொத்த தரவரிசையானது, உலக அளவிலான மாற்றம் மற்றும் நிலைத்தன்மையை வெளிக்காட்டுகின்ற 2015 முதல் 2017-ஆம் ஆண்டு வரையிலான Gallup World Poll Survey-வின் கூட்டு முடிவுகளின் அடிப்படையில் கணக்கிடப்பட்டுள்ளது.