2024 ஆம் ஆண்டு உலக மக்கள்தொகை வளங்கள் என்பது ஐக்கிய நாடுகளின் 28வது அதிகாரப் பூர்வ மக்கள்தொகை மதிப்பீடுகள் மற்றும் கணிப்பு அறிக்கையாகும்.
உலக மக்கள்தொகையானது வரவிருக்கும் சுமார் 50-60 ஆண்டுகளில் தொடர்ந்து அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப் படுவதோடு 2024 ஆம் ஆண்டில் 8.2 பில்லியனாக உள்ள மக்கள் தொகையானது 2080 ஆம் ஆண்டுகளின் நடுப் பகுதியில் சுமார் 10.3 பில்லியன் ஆக உயரும்.
உச்ச எண்ணிக்கையினை அடைந்த பிறகு, உலக மக்கள்தொகை படிப்படியாகக் குறையத் தொடங்கி, நூற்றாண்டின் இறுதியில் 10.2 பில்லியன் மக்களாகக் குறையும் என்று கணிக்கப் பட்டுள்ளது.
2024 ஆம் ஆண்டில் இந்தியாவின் மக்கள் தொகை 1.45 பில்லியனாக இருக்கும் என்று கணிக்கப் பட்டுள்ளது என்ற நிலையில் இது 2054 ஆம் ஆண்டில் 1.69 பில்லியனாக உயரும்.
இந்தியாவின் மக்கள் தொகையானது 2060 ஆம் ஆண்டுகளின் முற்பகுதியில் 1.7 பில்லியனாக உயரும் என்றும் பின்னர் அது 12% குறையும் என்றும் கணிக்கப் பட்டு உள்ளது.
ஆனால் இந்த நூற்றாண்டு முழுவதும் உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக இந்தியா விளங்கும்.
கடந்த ஆண்டு உலகின் அதிக மக்கள்தொகை கொண்ட நாடாக விளங்கிய சீனாவைப் பின்னுக்குத் தள்ளிய இந்தியா, 2100 ஆம் ஆண்டு வரை அந்த இடத்தைத் தக்க வைத்து இருக்கும்.
தற்போது 2024 ஆம் ஆண்டில் 1.41 பில்லியனாக இருக்கும் சீனாவின் மக்கள் தொகை ஆனது 2054 ஆம் ஆண்டில் 1.21 பில்லியனாக குறையும் என்றும், 2100 ஆம் ஆண்டில் 633 மில்லியனாகக் குறையும் என்றும் அந்த அறிக்கை கூறுகிறது.
இது 2024 மற்றும் 2054 ஆகிய ஆண்டுகளுக்கு இடையே மிகப்பெரிய அளவில் சீனா முழுமையான மக்கள்தொகை இழப்பினை (204 மில்லியன்) எதிர்கொள்ளும் என்ற நிலையில் அதைத் தொடர்ந்து ஜப்பான் (21 மில்லியன்) மற்றும் ரஷ்யா (10 மில்லியன்) ஆகியவை அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.