ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 12 அன்று உலக யானைகள் தினம் அனுசரிக்கப்படுகின்றது.
இது உலகில் உள்ள யானைகளைப் பாதுகாப்பதற்காக அர்ப்பணிக்கப் படுகின்றது.
இது 2011 ஆம் ஆண்டில் யானை மறுஅறிமுக அறக்கட்டளை மற்றும் கனடாவின் திரைப்படத் தயாரிப்பாளர்களான பேட்ரிசியா சிம்ஸ் மற்றும் மிக்செல் கிளார்க் ஆகியோரினால் ஏற்படுத்தப்பட்டது.
பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்பு மன்றத்தின் அச்சுறுத்து இனங்களுக்கான சிவப்புப் பட்டியலில் ஆப்பிரிக்க யானைகள் பாதிக்கப் படக்கூடிய இனமாகவும் ஆசிய யானைகள் “அழிந்து போகும் அபாயத்திலுள்ள இனமாகவும்” பட்டியலிடப்பட்டுள்ளது.
முதலாவது சர்வதேச யானை தினமானது 2012 ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 12 அன்று அனுசரிக்கப்பட்டது.
வேட்டையாடுதல், வாழ்விட இழப்பு, மனித–யானை மோதல்கள், யானை வளர்ப்பு முகாம்களில் அவற்றைத் தவறாக நடத்துதல் ஆகியவை யானைப் பாதுகாப்பில் உள்ள மிகப்பெரிய பிரச்சினைகளாகும்.
யானைகள்
யானைகள் திட்டமானது மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனங்கள் துறை அமைச்சகத்தினால் 1992-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.
இந்தத் திட்டம் இந்தியாவில் ஆந்திரப் பிரதேசம், அருணாச்சலப் பிரதேசம், அஸ்ஸாம், சத்தீஷ்கர், ஜார்க்கண்ட், கர்நாடகா, கேரளா, மகாராஸ்டிரா, மேகாலயா, நாகாலாந்து, ஓடிஸா, தமிழ்நாடு, திரிபுரா, உத்தரகாண்ட், உத்தரப் பிரதேசம் மற்றும் மேற்கு வங்காளம் என 16 மாநிலங்களில் முதன்மையாக நிறைவேற்றப்பட்டுக் கொண்டு இருக்கின்றது.
2010 ஆம் ஆண்டு அக்டோபர் 22 முதல் இந்தியாவின் தேசியப் பாரம்பரிய விலங்காக யானை விளங்குகின்றது.
கர்நாடகாவில் உள்ள பந்திப்பூர் தேசியப் பூங்கா மற்றும் நீலகிரி உயிர்க்கோளக் காப்பகம் ஆகியவை தென்னிந்தியாவின் மிகப்பெரிய பாதுகாக்கப்பட்ட பகுதியாகவும், இந்தியாவில் உள்ள யானைகளின் மிகப் பெரிய வாழ்விடமாகவும் விளங்குகின்றன.
கர்நாடகா, கேரளா மற்றும் தமிழ்நாடு ஆகிய தென்னிந்திய மாநிலங்கள் மொத்த யானைகளில் 44 சதவிகித யானைகளுக்கு வாழ்விடமாகத் திகழ்கின்றன. மேலும் இவை இந்தியாவில் 35 சதவிகித புலிகளையும் 31 சதவிகித சிறுத்தைகளையும் கொண்டுள்ளன.
கர்நாடகா மாநிலம் மட்டும் 22 சதவிகித யானைகளுக்கு வாழ்விடமாகத் திகழ்கின்றது. மேலும் இது இந்தியாவில் 18 சதவிகித புலிகளையும் 14 சதவிகித சிறுத்தைகளையும் கொண்டுள்ளது.
வடகிழக்கு இந்திய மாநிலங்களான அஸ்ஸாம், அருணாச்சலப் பிரதேசம், மிசோரம், மேகாலயா மற்றும் திரிபுரா ஆகியவை மேற்கு வங்காளத்துடன் இணைந்து இந்தியாவில் 30 சதவிகித யானைகளையும் 5 சதவிகித புலிகளையும் கொண்டுள்ளது.