லேகாடம் வளமை குறியீடு 2017-ன் (Legatum Prosperity Index) ஒரு பகுதியாக வெளியிடப்படும் உலகின் வளமையான நாடுகளின் பட்டியலில் 149 நாடுகளில் இந்தியா 100-வது இடத்தைப் பிடித்துள்ளது.
2016-ஆம் ஆண்டு 104-வது இடத்திலிருந்த இந்தியா இவ்வாண்டிற்கான வளமை குறியீட்டில் (Prosperity Index) நான்கு இடங்கள் முன்னேறி, தர வரிசைப் பட்டியலில் முன்னேற்றம் கண்டுள்ள பிரிக்ஸ் அமைப்பின் ஒரே நாடாக உயர்ந்துள்ளது.
இக்குறியீட்டின் விவரப்படி, இந்தியா ஆளுகை (Governance) மற்றும் பொருளாதார தரத்தில் சிறந்த செயல்பாடுகளை மேற்கொண்டுள்ளது.
உலக வளமை குறியீட்டில் முதலிடம் பெற்றுள்ள நார்வேவை அடுத்து நியூஸிலாந்து, பின்லாந்து, சுவிட்சர்லாந்து, சுவீடன் போன்ற நாடுகள் உள்ளன.
லேகாடம் வளமை குறியீடு
லேகாடம் வளமை குறியீடு இலண்டனைச் சேர்ந்த லேகாடம் நிறுவனத்தால் ஆண்டிற்கு ஒரு முறை வெளியிடப்படுகின்றது.
உலகம் முழுவதும் நாடுகளின் வளமைகள் எப்படி உருவாகின்றன மற்றும் அவை எப்படி மாற்றம் பெறுகின்றன என்பனவை பற்றிய உட்பார்வையை இக்குறியீடு வழங்கும்.
பொருளாதாரத் தரம், ஆளுகை, தொழிற் சூழல், தனிநபர் சுதந்திரம், தொழிற் பாதுகாப்பு, சமூக மூலதனம், கல்வி, ஆரோக்கியம் மற்றும் இயற்கை சுற்றுச்சூழல் போன்ற வகைப்பாட்டின் கீழ் 104 அளவுருக்களின் அடிப்படையில் உலக நாடுகளின் சமூக நல்வாழ்வு மற்றும் பொருளாதார வளமை போன்றவை இந்த முன்னணி குறியீட்டில் அளவிடப்படுகின்றன.