உள்நாட்டுத் தொழில்நுட்பத்தின் அடிப்படையிலான தனது முதல் ஒளிமின்னழுத்த நெடுஞ்சாலையை (photo voltaic highway) கிழக்கு மாகாணமான ஷன்டாங் மாகாணத்தில் சீனா வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது.
இந்த சோலார் சாலையானது மின்காப்பு பெற்ற அடுக்கை (Insulating layer) அடிப்பாகத்திலும், சோலார் ஒளி மின்னழுத்த தகடுகளை (photo voltaic panel) இடையிலும், தெளிவாகத் தெரியத்தக்க கான்கிரீட்டை (Transparent Concrete) மேல் அடுக்காகவும் கொண்டது.
சோதனை செய்யப்பட்டுள்ள இந்த நெடுஞ்சாலை பிரிவானது 817.2 கிலோவாட் மின் ஆற்றலை உருவாக்கத்தக்கது. மேலும் இவை ஒவ்வொரு ஆண்டும் 1 மில்லியன் கிலோவாட் மின் ஆற்றலை உருவாக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இந்த சோலார் நெடுஞ்சாலையால் உற்பத்தி செய்யப்பட்ட மின் ஆற்றலானது நெடுஞ்சாலை ஒளி விளக்குகள், சமிக்ஞை பலகைகள் (Sign Boards), கண்காணிப்பு கேமராக்கள், சுரங்கப்பாதை மற்றும் சுங்க கட்டணச் சாவடிகளின் சோதனை வசதிகள் போன்றவற்றிற்கு பயன்படுத்தப்படும்.
இந்த நெடுஞ்சாலை மூலம் உற்பத்தி செய்யப்படும் உபரி மின் ஆற்றலானது அரசின் மின் கட்டமைப்பிற்கு (grid) வழங்கப்படும்.
சூரிய மின் தகடுகள் (Solar panels) பொதியப் பெற்ற உலகின் முதல் ஒளி மின்னழுத்த நெடுஞ்சாலை முதன் முறையாக பிரான்ஸ் நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்டது.
தற்போது இத்தகு நெடுஞ்சாலையை கட்டமைத்திருக்கும் உலகின் இரண்டாவது நாடு சீனாவாகும்.