எகானமிஸ்ட் இன்டெலிஜென்ஸ் யூனிட் (Economist Intelligence Unit) எனும் இங்கிலாந்தைச் சேர்ந்த நிறுவனம் வெளியிட்டுள்ள 2017ஆம் ஆண்டிற்கான வருடாந்திர உலகளாவிய சிறந்த ஜனநாயக நாடுகள் குறியீட்டில் (Global Democracy Index) உலகின் 165 சுதந்திர நாடுகளுள் இந்தியா 42 வது இடத்தைப் பிடித்துள்ளது.
இந்த குறியீட்டில் மீண்டும் முதலிடம் பெற்று சிறந்த ஜனநாயக நாடாக நார்வே விளங்குகின்றது.
2016ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட இந்த குறியீட்டில் இந்தியா 32வது இடத்தைப் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது 10 இடங்கள் பின் தங்கி 42வது இடத்தைப் பெற்று “சற்று பலவீனமான ஜனநாயக நாடாக“ (Flawed Democracy) வகைப்படுத்தப்பட்டு உள்ளது.
இந்தியாவில் மத அடிப்படைவாத போக்கு அதிகரித்திருப்பதும், சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறை அதிகரித்திருப்பதும், தனியாக சில அமைப்புகள் அதிகாரத்தை கையில் எடுத்து செயல்படுவதும், இந்தியா இப்பட்டியலில் பின் தங்கியதற்கான காரணங்களாக கூறப்பட்டுள்ளன.
உலக நாடுகளில் நிலவும் ஜனநாயக போக்கைப் பொறுத்து, இக்குறியீட்டில் 4 வகைப்பிரிவின் கீழ் உலக நாடுகள் வகைப்படுத்தப்பட்டுள்ளன.
அந்நான்கு வகைப் பிரிவுகளாவன
முழுமையான ஜனநாயக நாடுகள்- Full Democracy
சற்று பலவீனமான ஜனநாயக நாடுகள்- Flawed Democracy
ஜனநாயகம் – சர்வதிகாரம் கலந்த நாடுகள்- Hybrid Regime
முழுமையான சர்வதிகார நாடுகள்- Authoritarian Regime
சுதந்திர தேர்தல் நடைமுறை, அரசியல் கலாச்சாரம், அரசின் செயல்பாடுகள், சிவில் சமூக அமைப்புகளுக்கான சுதந்திரம், பன்முகத்தன்மையை பேணுதல் போன்ற ஐந்து அளவுருக்களின் அடிப்படையில் 165 உலக நாடுகள் மதிப்பிடப்பட்டுள்ளன.