உலகின் முதல் குறைந்த செறிவூட்டபட்ட யுரேனியம் வங்கி
August 30 , 2017 2642 days 914 0
கஜகஸ்தான் நாட்டில் யுரேனியம் வங்கியினை (Low Enriched Uranium Bank - LEU) , சர்வதேச அணுசக்தி முகமையகம் (International Atomic Energy Agency - IAEA) துவங்கியுள்ளது. புதிய நாடுகள் அணுசக்தி எரிபொருட்களை செறிவூட்டுவதைக் குறைக்கும் நோக்கத்துடன் இது துவங்கப்பட்டுள்ளது.
கஜகஸ்தான் நாட்டின் ஓஸ்கிமென் நகரில் 150 மில்லியன் டாலர்கள் செலவில் துவங்கப்பட்டுள்ள இந்த வங்கியானது 90 டன் அளவிலான அணுசக்தி எரிபொருட்களை சேமித்து வைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. சர்வதேச அணுசக்தி முகமையகத்தின் உறுப்பினர் நாடுகளுக்கு அணு எரிபொருள் கிடைக்காத காலங்களில் இந்த வங்கியின் இருப்பில் இருந்து வழங்கப்படும்.
அணுமின் நிலையங்களுக்கு சீராக , தடை இல்லாத எரிபொருட்கள் கிடைக்கப்பெறுவதை இத்திட்டம் உறுதி செய்கிறது. உள்நாட்டுச் செறிவூட்டல் இல்லாமல் , ஒரே இடத்தில் அணுசக்தி எரிபொருட்களை செறிவூட்டி அதனை உறுப்பினர்களுக்கு விநியோகம் செய்வதே இந்தத் திட்டத்தின் நோக்கம் ஆகும்
2010 ஆம் ஆண்டு இதே போன்ற அணுசக்தி எரிபொருள் வங்கியினை ரஷ்யா தொடங்கியது. எனினும் கஜகஸ்தான் நாட்டில் தற்போது தொடங்கப்பட்டிருக்கும் வங்கியானது உலக அணுசக்தி கண்காணிப்புக் குழுவுக்கு முழுமையாக சொந்தமானதும், அக்குழுவால் இயக்கப்படுவதும் ஆகும்.
ஐக்கிய நாடுகள், ஐரோப்பிய ஒன்றியம், குவைத், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், நார்வே, அணு ஆயுத அச்சுறுத்தலுக்கான அமைப்பு (Nuclear Threat Initiative) போன்றவற்றின் நிதி உதவியைக் கொண்டு இந்த வங்கி நிறுவப்பட்டுள்ளது.
சர்வதேச அணுசக்தி முகமையகம்
சர்வதேச அணுசக்தி முகமையகம் (International Atomic Energy Agency) என்பது அணு சக்தியின் அமைதிவழிப் பயன்பாட்டினை ஊக்குவிக்கவும், அணுக்கருவிகளின் இராணுவப் பயன்பாடுகளை தடுக்கவும் ஜூலை 29, 1957 அன்று சர்வதேச அணுசக்தி அமைப்பு மசோதா மூலம் நிறுவப்பட்ட ஒரு தன்னாட்சி அமைப்பாகும்
மறைந்த அமெரிக்க குடியரசுத்தலைவர் ஐசனோவர் அவர்கள் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் 1953-ஆம் ஆண்டு ஆற்றிய அமைதிக்கான அணுக்கள் எனும் உரையில் அணு சக்தியின் பயன்பாட்டினை கட்டுப்பாட்டுடன் வளர்க்க இப்பன்னாட்டு அமைப்பை உருவாக்கும் ஆலோசனையை முன்வைத்தார்
நிறுவனத்தின் 60 ஆம் ஆண்டு விழாவிற்கானக் கருப்பொருள் (1957-2017): நமது குறிக்கோள் அமைதி மற்றும் மேம்பாட்டிற்காக அணுசக்தியை பயன்படுத்துவது (Our motto is Atoms for Peace and Development)