ரஷ்யா உலகின் முதல் மிதக்கும் அணு உலையின் அலகினை (World's only floating nuclear power unit) பால்டிக் கடல்பகுதியில் நிறுவியுள்ளது.
உலகின் முதல் மிதக்கும் அணுஉலை, ரஷ்யாவின் வடகிழக்குப் பகுதியான சுகோட்காவிலுள்ள பேவெக் (Pevek ) துறைமுகத்திற்கு, செயின்ட் பீட்டஸ்பெர்க் கப்பல் கட்டும் தளத்திலிருந்து இழுத்துக் கொண்டு வரப்பட்டது. செயின்ட் பீட்டஸ்பெர்க் கப்பல் கட்டும் தளத்தில்தான் இந்த மிதக்கும் அணு உலை கட்டப்பட்டது.
புகழ்பெற்ற ரஷ்ய விஞ்ஞானியான மைக்ஹெய்ல் வசில்யேவிச் லொமோனோசவ்வின் (Mikhail Vasilyevich Lomonosov) பெயரைக் கொண்டு இந்த மிதக்கும் அணுஉலைக்கு ‘அகாடெமிக் லொமோனோசவ்’ (Akademik Lomonosov) எனப் பெயரிடப்பட்டுள்ளது.
அகாடெமிக் லொமோனோசவ் அணுஉலையானது, 70 ஆண்டு காலப் பழமைவாய்ந்த சவ்ன்ஸ்கயா வெப்ப அணுஉலை மற்றும் 1974-ஆம் ஆண்டு கட்டப்பட்ட பிலிபினோ அணுஉலை அலகு ஆகியவற்றிற்கு மாற்றாக துவங்கப்பட்டுள்ளது.
இந்த மிதக்கும் அணுஉலை கடலில் கடுமையான சூழல்களைத் தாங்கி நிற்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட ரஷ்யாவின் மிதக்கும் அணு வெப்ப ஆற்றல் நிலைய வகுப்பை (Russia’s Floating Nuclear Thermal Power Plant - FNPP) சேர்ந்தது ஆகும்.
சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் இந்த முடிவை வன்மையாகக் கண்டித்ததுடன் இதை ‘அணு டைட்டானிக்’ (டைட்டானிக் விபத்தைக் குறிப்பிடுகின்றனர்), பனியின் மீதான செர்னோபில் (செர்னோபில் விபத்தைக் குறிப்பிடுகின்றனர்) என அழைக்கின்றனர். அமெரிக்கா 1968 முதல் 1975 வரையில் ஒருமுறை பனாமாவில் மிதக்கும் அணுஉலையைப் பயன்படுத்தியுள்ளது.