புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி (New & Renewable Energy) அமைச்சகத்தின் இணை அமைச்சர் (தனிப் பொறுப்பு) உலர் சாம்பல் வியாபாரம் தொடர்பான இணைய கண்காணிப்பு அமைப்பு மற்றும் கைபேசி செயலியை அறிமுகம் செய்து வைத்தார். இந்த செயலிக்கு ‘Ash Track’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.
இந்த இணையதளமானது அனல் மின் நிலையங்களில் உற்பத்தியாகும் உலர் சாம்பல் வியாபாரத்தை சிறந்த முறையில் நிர்வகிக்க உதவும். உலர் சாம்பல் உற்பத்தியாளர்களுக்கும் அதன் பெரும் பயன்பாட்டாளர்களுக்கும் (சாலை ஒப்பந்ததாரர்கள், சிமெண்ட் உற்பத்தியாளர்கள் போன்றோர்) இடையே ஒரு ஊடாடும் தளமாக இந்த செயலி அமையும்.
அனல்மின் நிலையங்களில் நிலக்கரி எரிக்கப்பட்டு மின்சாரம் உற்பத்திச் செய்யப்படுகின்றது. இவ்வாறு நிலக்கரி எரிக்கப்படும் பொழுது கிடைக்கும் இறுதி விளைப்பொருட்களில் உலர் சாம்பலும் ஒன்றாகும்.
இந்த உலர் சாம்பலானது கட்டுமானப் பணியில் பயன்படுத்துவதற்கு சிறந்த ஆதாரமாகும்.
அனல் மின் நிலையங்களில் உருவாகும் உலர் சாம்பல்கள் பெரும் நிலப்பகுதியை ஆக்கிரமிப்பதாலும், சுற்றுச் சூழலுக்கு கேடு விளைவிக்கக் கூடும் என்பதாலும் அவற்றை சரியான முறையில் கையாள்வது முக்கியமாகும்.