நடப்பில், மத்திய சிவில் போக்குவரத்து அமைச்சகத்தின் கீழ் செயல்படும் விமானப் போக்குவரத்து பாதுகாப்பு ஆணையத்தை (BCAS-Bureau Of Civil Aviation Security ) தன் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர மத்திய உள்துறை அமைச்சகமானது பாதுகாப்பிற்கான அமைச்சரவைக் குழுவிடம் ஓர் முன் மொழிவை அளித்துள்ளது.
உள்துறை அமைச்சகத்தின் இந்த செயல்பாட்டிற்கு மத்திய சிவில் விமானப்போக்குவரத்து அமைச்சகம் எதிர்ப்பினை தெரிவித்துள்ளது.
உள்துறை அமைச்சகம், புலனாய்வுப் பிரிவு (IB-Intelligence Bureau), மத்திய தொழிற்சாலை பாதுகாப்புப் படை (CISF) ,BCAS ஆகியவற்றின் நிபுணர்கள் அடங்கிய குழுவால் மேற்கொள்ளப்பட்ட பாதுகாப்புத் தணிக்கையின் அடிப்படையில் இந்த மாற்றத்திற்கான பரிந்துரைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
விமானப் போக்குவரத்து பாதுகாப்பு ஆணையம்
விமானப் போக்குவரத்துப் பாதுகாப்பு ஆணையம் மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ஓர் நிறுவனமாகும்.
தலைமையகம் - புதுதில்லி
பிராந்திய அலுவலகங்கள் - 4. (டெல்லி, சென்னை, கொல்கத்தா, மும்பை)
1976 செப்டம்பரில், இந்தியன் ஏர்லைன்சின் விமானம் கடத்தப்பட்ட பின்பு, விமானப் போக்குவரத்தின் பாதுகாப்பிற்காக சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகத்தின் (DGCA-Directorate General of Civil Aviation) கீழ் செயல்படும் ஒரு பிரிவாக விமானப் போக்குவரத்துப் பாதுகாப்பு ஆணையம் உருவாக்கப்பட்டது.
1989-ல் கனிஷ்கா வெடிகுண்டு நிகழ்வைத் தொடர்ந்து மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகத்தின் கீழ் சுதந்திரமான துறையாக மத்திய விமானப் போக்குவரத்து பாதுகாப்பு ஆணையம் மாற்றியமைக்கப்பட்டது.
விமான போக்குவரத்து பாதுகாப்பு ஆணையர் இதன் தலைவராவார்.
அனைத்து வர்த்தக விமானங்களின் பாதுகாப்பு தொடர்பான தரநிலைகள், கொள்கைகள் மற்றும் நடவடிக்கைகளை உருவாக்குவதே BCAS ன் முக்கிய பொறுப்பாகும்.
விமான நிலையங்களில் பணிபுரியும் பல்வேறு அரசு நிறுவன பணியாளர்களான புலனாய்வு பணியக அதிகாரிகள், குடியேற்ற அதிகாரிகள், பாதுகாப்பு அலுவலர்கள், உள்ளூர் காவலர்கள் BCAS ஆல் வழங்கப்படும் நெறிமுறைகளுக்கு உட்பட்டு செயல்படுகின்றனர்.