கேப்டன் ஆர்.சி. திரிபாதி அவர்களின் தலைமையிலான இந்திய விமானப் படையினுடைய மலையேற்ற வல்லுநர் குழுவானது அண்டார்டிகாவின் மிகவும் உயர்ந்த சிகரமான வின்சன் மலையின் உச்சியில் இந்தியாவின் மூவர்ணக் கொடியினையும் இந்திய விமானப்படையின் கொடியினையும் வெற்றிகரமாக பறக்கவிட்டுத் திரும்பியிருக்கிறது.
கடந்த இருபதாண்டுகளில், இந்திய விமானப்படையின் வெவ்வேறான குழுக்கள் வின்சன் மலையின் உச்சியை அடையும் முன்னர் பல்வேறு மலைகளின் உச்சிகளை அடைந்து சாதனை புரிந்துள்ளது. அவையாவன : ஆசியாவின் எவரெஸ்ட் மலைச் சிகரம், ஆஸ்திரலேசியாவில் (Australasia continent) உள்ள இந்தோனேசியாவின் கார்ஸ்டென்ஸ் பிரமிடு மலைச் சிகரம், ஐரோப்பாவின் ரஷ்யாவில் உள்ள எல்ப்ரஸ் மலைச் சிகரம், ஆப்ரிக்காவின் கிளிமஞ்சாரோ மலை, தென் அமெரிக்காவின் அர்ஜென்டினாவில் உள்ள அகான்ககுவா மலைச் சிகரம், வட அமெரிக்காவின் அலாஸ்காவில் உள்ள மெக்கின்லி/டெனாலி மலைச் சிகரம் ஆகும்.
உலகின் ஏழு கண்டங்களிலும் உள்ள அனைத்து முக்கியமான ஏழு மலைச் சிகரங்களின் உச்சியையும் அடைந்த முதலாவது பாதுகாப்பு அமைப்பாக இந்திய விமானப்படை திகழ்கிறது.
உலகின் அனைத்து கண்டங்களிலும் உள்ள உயரமான மலைகளின் மீது இந்தியாவின் மூவர்ண தேசியக் கொடியினை பறக்கவிடுவதை நோக்கமாகக் கொண்ட இந்திய விமானப்படையின் ‘செவன் சம்மிட்ஸ்’ இயக்கம் (IAF Mission Seven Summits) 2008-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.