இந்தியாவின் பிரத்யேக வழிகாட்டி செயற்கைக்கோளான ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். 1எச்-ஐ, பி.எஸ்.எல்.வி. சி 39 ராக்கெட் மூலம் விண்ணில் நிலை நிறுத்தும் முயற்சி தோல்வியில் முடிந்தது.
இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகம் (இஸ்ரோ) கடல்சார் ஆராய்ச்சிக்காக 7 செயற்கைக்கோள்களை விண்வெளிக்கு அனுப்ப முடிவு செய்தது. அதன்படி ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். 1எச் உடன் சேர்த்து இப்போது 7 செயற்கைக்கோள்கள் அனுப்பப்பட்டுவிட்டன. 2013-ஆம் ஆண்டு அனுப்பப்பட்ட ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். 1ஏ செயற்கைக்கோளின் ஆயுட்காலம் நிறைவடைந்ததையடுத்து அதற்கு மாற்றாக இந்தச் செயற்கைக்கோள் (ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். 1 எச்) அனுப்புவதற்கு முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். ஒரு பார்வை:
செயற்கைக்கோள் |
விண்ணில் செலுத்தப்பட்ட நாள் |
செலுத்து வாகனம் |
ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்-1A |
1 ஜூலை 2013 |
பி.எஸ்.எல்.வி C22 |
ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்-1B |
4 ஏப்ரல் 2014 |
பி.எஸ்.எல்.வி C24 |
ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்-1C |
15 அக்டோபர் 2014 |
பி.எஸ்.எல்.வி C26 |
ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்-1D |
28 மார்ச் 2015 |
பி.எஸ்.எல்.வி C27 |
ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்-1E |
20 ஜனவரி 2016 |
பி.எஸ்.எல்.வி C31 |
ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்-1F |
10 மார்ச் 2016 |
பி.எஸ்.எல்.வி C32 |
ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்-1G |
28 ஏப்ரல் 2016 |
பி.எஸ்.எல்.வி C33 |
ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்-1 H |
31 ஆகஸ்ட் 2017 |
பி.எஸ்.எல்.வி C39 |
பயன்பாடு என்ன ?
ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். செயற்கைக்கோள்கள் கடல் வழி ஆராய்ச்சிக்காக அனுப்பப்படுகிறது. இயற்கை பேரிடர் காலங்களில் கடல் பயணத்திற்கும் இந்த செயற்கைக்கோள்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மேலும் 1,500 கி. மீ. சுற்றளவு பரப்பளவுக்கு கடல் வழிகளையும், கடல் எல்லைகளையும் துல்லியமாகக் கண்காணிக்க முடியும். மேலும் தரையிலும், வான்வெளியிலும் செல்லும் அனைத்து வாகனங்களையும் கண்காணிக்க முடியும்.
இந்த செயற்கைக்கோள் கார்கள், சரக்கு வாகனங்கள், விமானங்கள், கப்பல்கள், நீர்மூழ்கிக் கப்பல்கள் இருப்பதை துல்லியமாக தெரிவிப்பதுடன், பயண நேரம் குறித்து சரியான தகவல்களையும் அளிக்கும். மேலும், பேரிடர் மேலாண்மை, செல்லிடப்பேசிகள் ஒருங்கிணைப்பு, புவியியல் வரைபடங்களை கண்காணித்தல், கார், கனரக வாகன (டிரக்ஸ்) ஓட்டுநர்களுக்கு குரல்வழி மூலம் முறையாக ஓட்டச்சொல்லி வாகனங்களை இயக்க வழிகாட்டும். இது இந்தியாவுக்கான பிரத்யேக வழிகாட்டி செயற்கைக்கோள். அமெரிக்காவின் ஜிபிஎஸ் போல இந்தியாவுக்கான எஸ்பிஎஸ் வழிகாட்டியாக இந்தச் செயற்கைக்கோள்கள் அமையும்.
பிஎஸ்எல்வி ராக்கெட் 24 ஆண்டுகளாக செயற்கைக்கோள்களை விண்வெளிக்கு அனுப்பும் பணியில் ஈடுபட்டு வருகிறது.
இத்தனை ஆண்டுகளில் 41 முறை பிஎஸ்எல்வி ராக்கெட்டை விண்ணில் செலுத்தியது இஸ்ரோ. அதில் முதல் முறையாக 1993 ஆம் ஆண்டு பி.எஸ்.எல்.வி ராக்கெட்டில் ஐ.ஆர்.எஸ்-1 இ என்ற செயற்கைக்கோளை விண்ணுக்கு அனுப்பியது.
இது தோல்வியில் முடிந்தது. அதன்பின் அனுப்பிய பி.எஸ்.எல்.வி., ராக்கெட்டுகள் அனைத்தும் வெற்றி பெற்றன. அதன்பின் 24 ஆண்டுகள் கழித்து இஸ்ரோ அனுப்பிய பிஎஸ்எல்வி சி-39 ராக்கெட்டில் ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். 1எச் செயற்கைக்கோளை அனுப்பும் முயற்சி தோல்வியில் முடிந்தது. இப்போது ஒட்டுமொத்தமாக 41 முறை ஏவப்பட்டு 39 இல் வெற்றி கண்டுள்ளது பிஎஸ்எல்வி வகை ராக்கெட்டுகள்.