ஐக்கிய நாடுகள் சபையின் தொலைதூரப் பெருங்கடல் பரப்புப் பாதுகாப்பு ஒப்பந்தம்
March 13 , 2023 625 days 307 0
ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பினர் நாடுகள், கடல் பரப்பின் மூன்றில் இரண்டு பங்கை உள்ளடக்கிய சர்வதேசக் கடல் பரப்பில் உள்ள பல்லுயிர்த் தன்மையினைப் பாதுகாப்பதற்கான ஒரு சர்வதேச ஒப்பந்தத்தில் ஒப்புக் கொண்டுள்ளன.
மேலும் இது பெருங்கடல் மீதான பாரீஸ் ஒப்பந்தம் எனவும் அழைக்கப் படுகின்றது.
1982 ஆம் ஆண்டில், கடல்சார் சட்டம் தொடர்பான ஐக்கிய நாடுகள் உடன்படிக்கை அல்லது UNCLOS ஏற்றுக் கொள்ளப் பட்டது.
இந்த உடன்படிக்கையானது பெருங்கடல்கள் மற்றும் அதன் வளங்களைப் பயன்படுத்துவதற்கான விதிகளை வரையறுத்தது.
ஆனால் எந்த நாடுகளின் கட்டுப்பாட்டிற்குள்ளும் அடங்காத பகுதிகளுக்கான ஒரு விரிவானச் சட்ட முறைமை எதுவும் உருவாக்கப்படவில்லை.
1958 ஆம் ஆண்டு ஜெனீவா தொலைதூரப் பெருங்கடல்பரப்பு உடன்படிக்கையின் படி, ஒரு நாட்டின் பிராந்திய நீர்ப் பரப்பு அல்லது உள்நாட்டு நீர் வளத்தில் சேர்க்கப்படாத கடல் பகுதிகள் தொலைதூரப் பெருங்கடல்பரப்பு என்று அழைக்கப் படுகின்றன.
இது கடற்கரையிலிருந்து 200 கடல் மைல்கள் (370 கிமீ) வரை நீண்டு காணப்படுகின்ற, ஒரு நாட்டின் பிரத்தியேகப் பொருளாதார மண்டலத்திற்கு அப்பால் அமைந்துள்ள பகுதியாகும்.
தொலைதூரப் பெருங்கடல் பரப்புகளில் உள்ள வளங்களின் மேலாண்மை மற்றும் பாதுகாப்பிற்கு எந்த நாடும் பொறுப்பேற்காது.
தொலைதூரப் பெருங்கடல்பரப்புகள் உலகின் கடல் பரப்பில் 60%க்கும் அதிகமான பரப்பினை உள்ளடக்கியதோடு, அவை பூமியின் மேற்பரப்பில் பாதியளவினை உள் அடக்கியதாகும்.
உயிரியல் பன்முகத் தன்மைக்கான உடன்படிக்கை மீதான (COP15) பங்குதாரர்கள் மாநாட்டில், 2030 ஆம் ஆண்டிற்குள் 30% கடல் பரப்புகளைப் பாதுகாப்பதற்கு உறுப்பினர் நாடுகள் ஒப்புக் கொண்டன.
இது வரலாற்றுச் சிறப்புமிக்க குன்மிங்-மாண்ட்ரியல் உலகப் பல்லுயிர்க் கட்டமைப்பு அமைப்பினால் கொண்டு வரப்பட்ட (GBF) '30 x 30 உறுதிமொழியின்' ஒரு பகுதி ஆகும்.