நாசாவின் ஹப்பிள் விண்வெளித் தொலைநோக்கியானது ஒமேகா சென்டாரியின் மையப் பகுதியில் ஓர் இடைநிலை நிறை கொண்ட மாபெரும் கருந்துளை இருப்பதைக் கண்டறிந்துள்ளது.
ஒமேகா சென்டாரி என்பது பால் வெளி அண்டத்தில் உள்ள, அடர்த்தியான விண்மீன் தொகுப்பிற்கு பெயர் பெற்ற மிகப்பெரிய கோளக விண்மீன் திரள் ஆகும்.
இடைநிலை நிறை கொண்ட கருந்துளைகள் (IMBHs) என்பது நட்சத்திர அளவிலான நிறை கொண்ட கருந்துளைகள் (சூரிய நிறையில் சிறிய அளவு முதல் பத்து மடங்கு வரையிலான) மற்றும் மீப்பெரும் கருந்துளைகள் (சூரிய நிறையில் மில்லியன்கள் முதல் பில்லியன் வரையிலான) ஆகியவற்றுக்கு இடைப்பட்ட ஒரு நிறையினைக் கொண்டதாக இருக்கும் கருந்துளைகள் ஆகும்.
குறிப்பாக, இடைநிலை நிறை கொண்ட கருந்துளைகள் நமது சூரியனை விட 100 முதல் 100,000 மடங்கு நிறை கொண்டதாக கருதப்படுகிறது.