மத்திய அரசின் ஒருங்கிணைந்த வனவிலங்கு வாழ்விடங்கள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ஓங்கில்கள் (டால்பின்) வளங்காப்பு திட்டத்தினை செயல்படுத்தச் செய்வதற்கு தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இராமேஸ்வரம் முதல் கன்னியாகுமரி வரை நீண்டுள்ள மன்னார் வளைகுடா பகுதியானது, 140 கிலோமீட்டர் நீளமுள்ள அதன் கடற்கரையில் மக்கள் வசிக்காத 21 தீவுகளின் தொடர் சங்கிலி அமைப்பினைக் கொண்டுள்ளது.
இந்தப் பகுதியில் ஸ்டெனோ ப்ரெடானென்சிஸ், ஸ்டெனெல்லா அட்டனுவாட்டா, ஸ்டெனெல்லா லாங்கிரோஸ்ட்ரிஸ் மற்றும் டெல்ஃபினஸ் டெல்ஃபிஸ் உள்ளிட்ட நான்கிற்கும் மேற்பட்ட ஓங்கில் இனங்கள் இருப்பதாக அறியப்படுகிறது.
ஓங்கில்கள் வளங்காப்புத் திட்டத்தின் செயல்பாடுகளில் ரோந்துப் பணி மற்றும் கண்காணிப்பினை வலுப்படுத்துதல், கடலோர சுற்றுச்சூழல் அமைப்புகளை மீட்டெடுப்பதன் மூலம் அவற்றின் வாழ்விடத்தை மேம்படுத்துதல், கடலில் காணாமல் போன மீன்பிடி (பேய் வலைகள்) வலைகளை அகற்றுதல் மற்றும் ஊக்கத்தொகை அளித்து உள்ளூர் மக்களை இத்திட்டத்தில் ஈடுபடச் செய்ய ஊக்குவித்தல் ஆகியவை அடங்கும்.
இத்திட்டத்திற்கான 60% செலவினத்தை மத்திய அரசும், மீதமுள்ளச் செலவை மாநில அரசும் ஏற்கும்.