இந்தியத் தேர்தல் ஆணையம், 224 சட்டப் பேரவைத் தொகுதிகளைக் கொண்ட கர்நாடக மாநிலத்திற்கு ஒரே கட்டமாக மே 12 அன்று தேர்தலை அறிவித்துள்ளது. இதற்கான முடிவுகள் மே 15 அன்று வெளியிடப்படும்.
வேட்பாளர்கள், கட்சிகள் மற்றும் தற்போதைய அரசு ஆகிய அனைவரும் பிரச்சாரத்தில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகளான தேர்தல் நடத்தை விதிமுறைகள் (The Model Code of Conduct) கர்நாடகாவில் அமலுக்கு வந்துள்ளன.
இந்த தேர்தல் நடத்தை விதிமுறைகள் மத்திய மற்றும் மாநில அரசுகள் ஆகிய இருவருக்கும் பொருந்தும்.
கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் தொடர்பான அறிவிப்பு ஏப்ரல் 17 அன்று அரசிதழில் வெளியிடப்படும்.
வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி ஏப்ரல் 24 மற்றும் வேட்புமனுக்களை திரும்பப் பெறுவதற்கான கடைசி தேதி ஏப்ரல் 27 ஆகும். அனைத்து தேர்தல் நடைமுறைகளும் மே 18 உடன் முடிவுக்கு வரும்.
தேர்தல் ஆணையம் கர்நாடகாவில் அனைவரும் வாக்களிப்பதற்கு ஏதுவான மையங்களை (Accessible Polls) அமைக்கக் கேட்டுக் கொண்டுள்ளது. தேர்தல் நடத்துவதற்காக அனைத்து வேட்பாளர்களின் புகைப்படங்களுடன் கூடிய VVPAT (Voter Verifiable Paper Audit Trail Systems) இயந்திரங்கள் அனைத்து வாக்குச்சாவடி மையங்களுக்கும் வழங்கப்படும்.
முதன்முறையாக, கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தமுள்ள 56, 696 வாக்குச்சாவடிகளில் 450 வாக்குச்சாவடிகளை முழுவதும் பெண்களே நிர்வகிக்க உள்ளனர்.
திருத்தப்பட்ட அளவின்படி, சட்டப்பேரவைத் தொகுதிகளில் ஒரு வேட்பாளருக்கான அதிகபட்ச தேர்தல் செலவு ரூ.28 லட்சம் ஆகும்.