கானமயில் (ஆர்டியோடிஸ் நிக்ரிசெப்ஸ் - Great Indian Bustard) இனப்பெருக்கத்தில் இந்தியா ஒரு வெற்றிகரமான உலக சாதனையைப் படைத்துள்ளது.
தற்பொழுது இந்த இனத்தில் 150 பறவைகள் உலகளவில் எஞ்சியுள்ளன என்று மதிப்பிடப் பட்டுள்ளது.
இது இந்திய துணைக் கண்டத்தில் மட்டுமே வாழும் ஒரு பறவை இனமாகும்.
இது இந்தியாவில் உள்ள ராஜஸ்தான் (பாலைவன தேசியப் பூங்கா), குஜராத், மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களிலும் பாகிஸ்தானின் சில பகுதிகளிலும் காணப்படுகின்றது.
பாதுகாப்பு நிலை:
பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்பு மன்றத்தின் சிவப்பு பட்டியலில் இது “மிக அருகிய இனமாக” வகைப்படுத்தப் பட்டுள்ளது.
இந்திய வனவிலங்கு (பாதுகாப்பு) சட்டம், 1972ன் அட்டவணை Iல் இது பட்டியலிடப் பட்டுள்ளது.
CITES இன் (அருகிவரும் வனவிலங்குகள் மற்றும் தாவரங்களின் சர்வதேச வர்த்தகம் மீதான ஒப்பந்தம் - Convention on International Trade in Endangered Species of Wild Fauna and Flora) அட்டவணை Iல் பட்டியலிடப் பட்டுள்ளது.
பாதுகாப்பு நடவடிக்கைகள்
கானமயில் திட்டம்:
இது 2018 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட ராஜஸ்தான் அரசின் ஒரு திட்டமாகும்.
பாலைவன தேசியப் பூங்காவில் இந்தப் பறவைகள் வெற்றிகரமாக இனப்பெருக்கம் செய்வதை உறுதி செய்வதற்காக இந்தப் பறவைகளுக்கான வாழிடங்களை அமைத்தல் மற்றும் இந்தப் பறவைகள் வாழும் பகுதிகளைப் பாதுகாத்தல் ஆகியவற்றை மேற்கொள்ள இது திட்டமிட்டுள்ளது.
கானமயில் மீட்புத் திட்டம்:
இது மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தினால் 2017 ஆம் ஆண்டில் தொடங்கப் பட்டது.