காமன்வெல்த் கூட்டமைப்பில் (Commonwealth organization) உள்ள காமன்வெல்த் நாடுகளின் தலைவர்கள் இங்கிலாந்து அரசியான எலிசபெத்திற்குப் பிறகு காமன்வெல்த் கூட்டமைப்பின் அடுத்த தலைவராக பிரிட்டன் இளவரசர் சார்லஸை ஏற்றுக் கொள்ள ஒத்துக் கொண்டுள்ளனர்.
இங்கிலாந்தில் நடைபெற்ற காமன்வெல்த் நாடுகளின் அரசுத் தலைவர்கள் சந்திப்பில் (Commonwealth Heads of Government Meeting) கலந்துகொண்ட அரசுத் தலைவர்களால் இந்த முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது.
மறைந்த தன் தந்தை ஆறாம் ஜார்ஜிடம் (George VI) இருந்து காமன்வெல்த் அமைப்பின் தலைவர் பொறுப்பைப் பெற்ற இங்கிலாந்து அரசியான எலிசபெத் ராணி 1952-ஆம் ஆண்டிலிருந்து காமன்வெல்த் அமைப்பின் தலைவராக உள்ளார்.
இருப்பினும் காமன்வெல்த் அமைப்பின் தலைவர் பதவி பரம்பரை மரபுவழிப் பட்டதல்ல (hereditary). காமன்வெல்த் கூட்டமைப்பின் தலைவரை தேர்ந்தெடுப்பது இக்கூட்டமைப்பில் உள்ள 53 நாடுகளின் தலைவர்களைப் பொறுத்ததாகும்.
காமன்வெல்த் கூட்டமைப்பில் 53 நாடுகள் உள்ளன. பெரும்பாலும் இவை பிரிட்டிஷ் ஆட்சிக்குட்பட்டிருந்த முன்னாள் காலனியப் பகுதிகளாகும்.
இரு ஆண்டுகளுக்கு ஒருமுறை காமன்வெல்த் தலைவர்கள் மாநாடு நடத்தப்படுகின்றது.