நீண்ட பயணங்களின் போது கால்நடைகள் விழித்திருக்கவும், சரக்குந்துகளில் அவை அமர்வதையோ /படுப்பதையோ தடுக்கவும் அவற்றின் கண்களில் மிளகாய்த் துகள்களை பூசும் நடைமுறையை நிறுத்துமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு இட்டுள்ளது.
கால்நடைகளை ஏற்றிச் செல்பவர்கள் பின்பற்ற வேண்டிய மிகவும் விரிவான பல்வேறு வழிகாட்டுதல்களையும் இது வகுத்துள்ளது.
கால்நடைகள் வழுக்கி விழுவதைத் தடுக்கும் வகையில் சாய்வு தளங்கள் மற்றும் ஏற்றிச் செல்லும் வாகனங்கள் வடிவமைக்கப்பட வேண்டும்.
கால்நடைகளை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் சரியான காற்றோட்டம் கொண்டதாக இருக்க வேண்டும் மற்றும் அதில் மித சூடான வெப்பநிலை இருப்பது உறுதி செய்யப் பட வேண்டும்.
அவற்றின் பயணத்தின் போது கால்நடைகளுக்கு ஏதேனும் துன்பம் / காயம் / கடும் நோய்க்கான அறிகுறிகள் இருக்கிறதா என்பதை அவ்வப்போது சரி பார்க்க வேண்டும்.
ஒரு விலங்கிலிருந்து மற்றொரு விலங்கிற்கு கடும் நோய்கள் பரவாமல் தடுப்பதற்காக கால்நடைகளை கொண்டு செல்வதற்கு முன் மோட்டார் வாகனங்களை நன்கு சுத்தம் செய்ய வேண்டும்.
மேலும், விலங்குகளைக் கொண்டு செல்லக் கூடிய அங்கீகரிக்கப்பட்ட தூரம் மற்றும் கால அளவைச் சான்றளிக்கும் அங்கீகரிக்கப்பட்ட கால்நடை நலன் மருத்துவர்களால் வழங்கப்பட்ட மருத்துவச் சான்றிதழ்களை இந்தப் போக்குவரத்து நிறுவனங்கள் உறுதி செய்ய வேண்டும்.