சிறப்புக் கவனம் தேவைப்படுகின்ற கிராமங்களைத் தேர்ந்தெடுத்து அதற்கு நலத்திட்டங்களை வழங்கும் திட்டமான (High Intensity outreach Programme) “கிராம் ஸ்வராஜ் அபியான் – சிறப்பு தலையீடுகள்” என்ற திட்டத்தை மத்திய அரசு தொடங்கியுள்ளது. சப்கா சாத், சப்கா கவோன், சப்கா விகாஸ் எனும் பெயரில் பாபாசாகேப் அம்பேத்கர் ஜெயந்தி (ஏப்ரல் 14) விழாவின் போது இத்திட்டம் தொடங்கப்பட்டது.
இத்திட்டம் 33 மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்களிலுள்ள 484 மாவட்டங்களில் செயல்படுத்தப்படும். இத்திட்டத்தின் கீழ் வரும் அதிகபட்ச எண்ணிக்கையிலான கிராமங்கள் உத்திரப்பிரதேசம், அஸ்ஸாம், தமிழ்நாடு, பஞ்சாப் மற்றும் மேகாலயா ஆகிய மாநிலங்களில் அமைந்துள்ளன.
ஒன்றிணைவு மற்றும் செறிவூட்டல் (Convergence and Saturation) கொள்கையின் அடிப்படையிலான அந்தியோதயா போன்ற ஊரக மேம்பாட்டுத் திட்டங்களின் வரிசையில் கிராம் ஸ்வராஜ் அபியான் தொடங்கப்பட்டுள்ளது. 2018 ஆம் ஆண்டின் ஏப்ரல் 14 முதல் மே 5 வரையிலான மூன்று வார காலகட்டத்தில் தகுதியுடைய பயனாளிகளுக்கு மத்திய அரசின் ஏழு திட்டங்கள் 100% அளவில் சென்றடடைவதை இத்தொடக்கம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
இதன் கீழ் வரும் ஏழு திட்டங்களாவன
பிரதம மந்திரி உஜ்வாலா யோஜனா
உஜாலா திட்டம்
சவுபாக்யா திட்டம்
பிரதம மந்திரி ஜன் தன் யோஜனா
பிரதம மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா
பிரதம மந்திரி சுரக்ஸா பீமா யோஜனா
இந்திர தனுஷ் திட்டம்
சமூக ஒற்றுமையை ஊக்குவித்தல், வறுமையில் வாடும் ஊரக குடும்பங்களுக்குத் திட்டங்களின் பயன்கள் சென்றடடைதல், செயல்பாட்டிலிருக்கும் திட்டங்களின் பின்னூட்டங்களைப் (Feedback) பெறுதல், புதிய தொடக்கங்களில் பதிவு செய்தல், விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்கலில் கவனம் செலுத்துதல், வாழ்வாதார வாய்ப்புகளை மேம்படுத்துதல், தூய்மை உள்ளிட்ட தேசிய முன்னுரிமைகளை மீண்டும் வலியுறுத்தல், மற்றும் பஞ்சாயத்து ராஜ் அமைப்புகளை பலப்படுத்துதல் ஆகியவற்றை இத்திட்டம் நோக்கங்களாகக் கொண்டுள்ளது.