TNPSC Thervupettagam

கீழடி அகழ்வாய்வு

September 23 , 2019 1946 days 1866 0
  • சிவகங்கை மாவட்டத்தில் கீழடியில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சியின் போது கண்டுபிடிக்கப்பட்ட கலாச்சார ஆதாரங்கள்  கி.மு 6 ஆம் நூற்றாண்டுக்கும் கி.பி 1 ஆம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலத்தைச் சேர்ந்தவை என்று தமிழ்நாடு தொல்பொருள் துறை (Tamil Nadu Archaeology Department - TNAD) தெரிவித்துள்ளது. அதாவது இந்தக் கண்டுபிடிக்கப்பட்ட ஆதாரங்கள் 2600 ஆண்டுகள் பழைமையானவை ஆகும்.
  • TNADயினால் அதிகாரப் பூர்வமாக தேதி அறிவிக்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.
  • மேலும் 2017 ஆம் ஆண்டில் இந்தத் தளத்தில் அகழ்வாராய்ச்சி தொடங்கிய பின்னர் கீழடி குறித்த புத்தகம் வெளிவருவது இதுவே முதல் முறையாகும்.
  • ‘கீழடி - வைகை நதிக்கரையில் சங்க காலத்தின் நகர்ப்புறக் குடியிருப்புகள்’ என்ற தலைப்பைக் கொண்ட ஒரு அறிக்கையானது TNADயினால் வெளியிடப்பட்டது.
  • இந்த அறிக்கையில் உள்ள புதிய கண்டுபிடிப்புகள் கீழடி தொல் பொருள்களை முன்பு நம்பப்பட்ட கி.மு 3 ஆம் நூற்றாண்டை விட சுமார் 300 ஆண்டுகள் பழமையானவை என்று கூறுகின்றது.
  • சங்க காலமானது கி.மு 300 மற்றும் கி.பி 300க்கு இடைப்பட்ட காலமாகக் கருதப்படுகின்றது.
  • ஆனால் கண்டுபிடிக்கப்பட்ட பொருட்களை கரிமப் பகுப்பாய்வு  என்ற காலக் கணிப்பு முறையின் மூலம் அதன் காலத்தை நிர்ணயித்த பின்னர் இந்த புதிய அறிக்கையானது சங்க காலம் என்பது கி.மு 600 மற்றும் கி.பி 100க்கு இடைப்பட்ட காலமாக இருக்கலாம் என்பதைக் காட்டுகின்றது.
  • நான்காவது அகழ்வாராய்ச்சியின் முடிவுகள், "கங்கை சமவெளிகளில் நிகழ்ந்ததைப் போலவே கி.மு 6 ஆம் நூற்றாண்டில் தமிழ்நாட்டில் வைகை சமவெளிகளில் இரண்டாவது நகரமயமாக்கல் [முதலாம் நகர நாகரீகம் சிந்து நாகரிகம்] நிகழ்ந்துள்ளது" என்று கூறுகின்றது.
  • கி.மு 600 முதல் கீழடியில் ஒரு மேம்பட்ட நகர்ப்புற வாழ்விடம் இருந்தது என்பதைப் புதிய கண்டுபிடிப்புகள் நிரூபிக்கின்றன.
  • மேலும் சங்க காலத்தைச் சேர்ந்த தமிழர்கள் கி.மு 6 ஆம் நூற்றாண்டிற்கு முன்பிலிருந்தே கல்வியறிவு பெற்றிருந்தனர் என்றும் இந்த ஆய்வு கூறுகின்றது.
  • கீழடியில் மேற்கொள்ளப்பட்ட நான்காவது அகழ்வாராய்ச்சியின் (2018) போது சேகரிக்கப்பட்ட ஆறு கார்பன் மாதிரிகள் விரைவுத் திரள் நிறமாலையியல் (Accelerator Mass Spectrometry - AMS) என்ற காலக் கணிப்பிற்காக அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள மியாமியில் அமைந்துள்ள பீட்டா அனலிட்டிக் ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.
  • 353 செ.மீ ஆழத்தில் சேகரிக்கப்பட்டு கார்பன் காலக் கணிப்பு சோதனைக்காக அமெரிக்காவிற்கு அனுப்பப்பட்ட ஆறு மாதிரிகளில் ஒன்று “கி.மு 580” ஆம் கால கட்டத்தைச் சேர்ந்தவையாகும்.
  • கண்டுபிடிக்கப்பட்ட எலும்புத் துண்டுகள் புனேவில் உள்ள டெக்கான் முதுகலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்திற்கு அனுப்பப்பட்டன.  மேலும் அவை மாடு/ எருது, எருமை, செம்மறி ஆடு, ஆடு, நீலான் என்ற ஒரு மான் இனம், புல்வாய் வகை மான் இனம், காட்டுப்பன்றி மற்றும் மயில் போன்ற உயிரினங்களைச் சார்ந்தவை என்று அடையாளம் காணப்பட்டுள்ளன.
  • ஆனால் அங்கு யானை போன்ற பெரிய விலங்குகள் இருந்ததற்கான ஆதாரங்கள் எதுவும் கிடைக்கவில்லை.
  • இந்தக் கண்டுபிடிப்பானது கீழடியில் உள்ள சமூகம் விவசாயப் பயன்பாட்டிற்காக இந்த விலங்குகளை முக்கியமாகப் பயன்படுத்தியது என்று கூறுகின்றது.
  • TNADயினால் மட்டுமே நடத்தப்பட்ட கீழடி அகழ்வாராய்ச்சியிலிருந்து ஐம்பத்தாறு தமிழ் - பிராமி பொறிக்கப்பட்ட மட்கல உடைசல்கள் மீட்கப்பட்டுள்ளன.
  • கீழடியிலிருந்து எடுக்கப்பட்ட மட்பாண்ட மாதிரிகள் கனிமப் பகுப்பாய்விற்காக வேலூர் தொழில்நுட்ப நிறுவனத்தின்  மூலம் இத்தாலியின் பிசா பல்கலைக்கழகத்தின் புவி அறிவியல் துறைக்கு அனுப்பப்பட்டன. இந்த ஆய்வின் மூலம் உள்நாட்டில் கிடைக்கும் மூலப் பொருட்களிலிருந்து நீர் கொள்கலன்கள் மற்றும் சமையல் பாத்திரங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன என்பது உறுதிப்படுத்தப் பட்டுள்ளது.
  • முதல் மூன்று அகழ்வாராய்ச்சிகள் இந்திய தொல்பொருள் ஆய்வுத் துறையால் மேற்கொள்ளப்பட்டாலும், நான்காவது அகழ்வாராய்ச்சியானது TNADயினால் மேற்கொள்ளப்பட்டது.
  • மேலும் TNADயினால் ஐந்தாவது அகழ்வாராய்ச்சியானது மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
  • அகழ்வாராய்ச்சித் தளத்திலிருந்து பெறப்பட்ட கலைப் பொருட்களின் மீதான ஓவியக் குறிகள் சிந்து சமவெளி நாகரிகத்தின் எழுத்து வடிவம் மற்றும்  தமிழ் - பிராமி எழுத்து வடிவம் ஆகியற்றிற்கிடையிலான தொடர்பைச் சுட்டிக் காட்டுகின்றன.
  • கி.மு ஐந்தாம் நூற்றாண்டானது கொடுமணல், அழகன்குளம் மற்றும் பொருந்தல் போன்ற தொல்பொருள் தளங்களிலிருந்து மீட்கப்பட்ட பொருள்களின் கதிர்வீச்சுக் காலக் கணிப்பின் அடிப்படையில் தமிழ் – பிராமி காலமாகக் கருதப் படுகின்றது.
  • கீழடி கண்டுபிடிப்புகளுக்காக பெறப்பட்ட சமீபத்திய தேதிகள் அதனை கி.மு 6 ஆம் நூற்றாண்டிற்குக் கொண்டு செல்கின்றன.

இதுபற்றி

  • கீழடி அகழ்வாராய்ச்சித் தளமானது ஒரு சங்க காலக் குடியிருப்புத் தளமாகும்.
  • இந்த அகழ்வாராய்ச்சித் தளமானது தமிழ்நாட்டில் மதுரைக்கு தென்கிழக்கே 12 கி.மீ தொலைவில், சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கீழடி நகருக்கு அருகில் அமைந்துள்ளது.
  • ஆதிச்சநல்லூர் தொல்பொருள் அகழ்வாராய்ச்சிக்குப் பிறகு தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்பட்ட மிகப்பெரிய அளவிலான அகழ்வாராய்ச்சி இதுவாகும்.
  • இந்தக் குடியிருப்பானது வைகை ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. இது தமிழர்களின் பண்டையக் கலாச்சாரத்தைப் பிரதிபலிக்கின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்