உயிரியல் பன்முகத் தன்மைக்கான ஐக்கிய நாடுகளின் உடன்படிக்கையின் (CBD) 15வது பங்குதாரர்களின் மாநாடானது (COP15) கனடாவின் மாண்ட்ரீயல் நகரில் நடைபெற்றது.
இந்த மாநாட்டிற்குச் சீனா தலைமை வகித்தது.
இந்த மாநாடானது குன்மிங்-மாண்ட்ரீயல் உலகப் பல்லுயிர்க் கட்டமைப்பு என்ற ஒரு ஒப்பந்தத்தினை ஏற்றுக் கொண்டது.
2030 ஆம் ஆண்டிற்குள் பல்லுயிர் இழப்பு மற்றும் இயற்கை சுற்றுச்சூழல் அமைப்புகளை மீட்டெடுப்பதற்கான 23 இலக்குகள் மற்றும் நான்கு இலக்குகள் ஆகியவற்றை இந்த ஒப்பந்தம் உள்ளடக்கியுள்ளது.
பல்லுயிர்ப் பெருக்கத்திற்கு அவசியமானவையாகக் கருதப்படும் 30 சதவீத நிலம் மற்றும் நீர் வளங்களைப் பாதுகாப்பதற்கான இந்த ஒப்பந்தம் 30 by 30 என அழைக்கப் படுகிறது.
2030 ஆம் ஆண்டிற்குள் உலகப் பல்லுயிர்க் கட்டமைப்பு இலக்குகள் பூர்த்திச் செய்யப் பட வேண்டும்.
உலகப் பல்லுயிர் கட்டமைப்பினைச் செயல்படுத்துவதற்கு உதவி வழங்குவதற்காக, ஒரு சிறப்பு அறக்கட்டளை நிதியத்தினை நிறுவிட வேண்டி உலகளாவிய சுற்றுச்சூழல் மையத்திடம் கோரப் பட்டுள்ளது.
உலகப் பல்லுயிர்க் கட்டமைப்பின் ஒரு பகுதியாக, ஆண்டிற்கு 500 பில்லியன் டாலர் மதிப்பிலான தீங்கு விளைவிக்கும் பிரிவுகளுக்கான அரசாங்க மானியங்களைக் குறைக்கவும், 2025 ஆம் ஆண்டிற்குள்ளாக பல்லுயிர்ப் பெருக்கத்திற்கு மிகவும் தீங்கு விளைவிக்கும் வகையிலான மானியங்களை அடையாளம் காணவும் நாடுகள் உறுதி அளித்துள்ளன.
இதன் முக்கிய இலக்குகள்
உலகின் நிலம், நீர், கடலோர மற்றும் கடல் பகுதிகளில் குறைந்தது 30% பகுதிகளை பாதுகாத்தல்
பாதிக்கப்பட்ட நிலப்பரப்பு, உள்நாட்டு நீர் வளங்கள், கடலோர மற்றும் கடல்சார் சுற்றுச்சூழல் அமைப்புகளில் குறைந்தது 30% பகுதிகளை மீளச் செய்தல்
உலகளாவிய உணவுக் கழிவுகளைப் பாதியாகக் குறைத்தல் மற்றும் அதிகப் படியான நுகர்வுகள் மற்றும் கழிவுகளைக் குறைத்தல்
பூச்சிக் கொல்லிகள் மற்றும் அபாயகரமான இரசாயனங்களின் பயன்பாட்டைப் பாதியாகக் குறைத்தல்.