12 வயதிற்கு கீழ் உள்ள சிறுமிகளை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கும் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை அளிக்கும் குற்றவியல் சட்ட (திருத்த) மசோதா, 2018- ஐ மக்களவை நிறைவேற்றியுள்ளது.
இம்மசோதா ஏப்ரல் 2018-ல் குடியரசுத் தலைவரால் பிரகடனப்படுத்தப்பட்ட அவசர சட்டத்திற்கு பதிலாக அமையும். மேலும் இந்திய குற்றத் தண்டனை விதி (Indian Penal Code - IPC), குற்றவியல் நெறிமுறைச் சட்டம் (Criminal Procedure Code), பாலியல் வன்முறைகளிலிருந்து குழந்தைகளைக் காத்தல் சட்டம் (Protection Children from Sexual Offences - POSCO) மற்றும் இந்திய சான்றுரைச் சட்டம் (Indian Evidence Act) போன்றவற்றையும் இம்மசோதா திருத்தி அமைக்கிறது.
இம்மசோதாவில்
12 வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகளை பாலியல் வன்முறைக்கு உள்ளாக்குபவர்களுக்கு 20 வருட கடும் காவல் தண்டனை (அ) ஆயுட் தண்டனை (அ) மரண தண்டனை விதிக்கப்படும்.
12 வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகளை கும்பல் கற்பழிப்புக்கு உள்ளாக்குபவர்களுக்கு மரண தண்டனை (அ) மீதமுள்ள வாழ்நாள் முழுவதும் சிறை தண்டனை விதிக்கப்படும்.
16 வயதிற்குட்பட்ட சிறுமிகளிடம் பாலியல் வன்முறையில் (அ) கும்பலாக பாலியல் வன்முறையில் ஈடுபடுபவர்களுக்கு முன் ஜாமீன் வழங்கப்படாது.
விரைந்த புலனாய்வு மற்றும் வழக்கு விசாரணை ஆகியவற்றை இரண்டு மாதத்திற்குள் முடிக்க வேண்டும்.
கற்பழிப்பு வழக்குகளுக்கான மேல்முறையீடுகளை விசாரிப்பதற்கு 6 மாத கால அவகாசம் வழங்கப்படும்.