தமிழ்நாடு மாநில கூட்டுறவுச் சங்கங்களுக்கான தேர்தல் ஆணையம் மாநிலம் முழுவதும் உள்ள கூட்டுறவுச் சங்கங்களுக்கான உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலை அறிவித்துள்ளது.
கூட்டுறவுச் சங்கங்களுக்கான தேர்தல் ஆணையத்தின் தலைவர் ராஜேந்திரன் இந்தத் தேர்தல்கள் 5 கட்டங்களாக நடைபெறும் என அறிவித்துள்ளார்.
கூட்டுறவுச் சங்கங்களுக்கான தேர்தல் கடந்த 2013-ம் ஆண்டு நடந்தது. நிர்வாகக்குழு உறுப்பினர்களின் 5 ஆண்டு பதவிக்காலம் இந்த மாதம் (ஏப்ரல்) முடிவடைய உள்ளது.
எனவே உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டு பதவி ஏற்பதை உறுதி செய்ய ஏதுவாக, நிர்வாகக்குழு உறுப்பினர்களுக்கான தேர்தல்களை கூட்டுறவு தேர்தல் ஆணையம் நடத்த உள்ளது.
கூட்டுறவுத்துறை, பால் உற்பத்தி மற்றும் பால் பண்ணை மேம்பாட்டுத்துறை, மீன் வளத்துறை, கைத்தறி மற்றும் துணிநூல் துறை உள்ளிட்ட 15 அரசுத் துறைகளின் கட்டுப்பாட்டின் கீழ் வரும் 18 ஆயிரத்து 775 சங்கங்களின் நிர்வாகக்குழு உறுப்பினர்களுக்கான தேர்தல்களை கூட்டுறவு தேர்தல் ஆணையம் நடத்த இருக்கிறது.
தொடக்க சங்கங்கள், மத்திய சங்கங்கள், மாநில சங்கங்கள் என்ற 3 அடுக்கு முறையில் கூட்டுறவு சங்கங்கள் தமிழ்நாட்டில் செயல்பட்டு வருவதால் அவற்றிற்கான தேர்தல்களை 5 கட்டங்களாக நடத்தத் திட்டமிடப்பட்டு உள்ளது.
கூட்டுறவுச் சங்கங்களின் கூடுதல் பதிவாளர், சென்னை மற்றும் கூட்டுறவுச் சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளர்கள் மாவட்ட தேர்தல் பார்வையாளர்களாக நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.