கைகளால் கழிவுகளை அள்ளும் பணியாளர்கள் குறித்து சென்னை உயர்நீதிமன்றம்
May 4 , 2024 204 days 258 0
சென்னை உயர்நீதிமன்றம் ஆனது கழிவுகளை வெறும் கைகளால் அள்ளும் துப்புரவுத் தொழிலாளர்கள் பிரச்சினையைத் திறம்பட கையாள்வதற்காக 19 வழிகாட்டுதல்கள் கொண்ட தொகுப்பினை அரசுக்கு வழங்கியுள்ளது.
மேலும் குறைந்தபட்சமாக 2026 ஆம் ஆண்டிற்குள் இந்த நடைமுறையை ஒழிக்குமாறு நீதிமன்றம் அரசாங்கத்திடம் கோரியுள்ளது.
இந்த வழிகாட்டுதல்கள் பாதாளச் சாக்கடை, மலம் மக்கும் தொட்டி மற்றும் மழைநீர் வடிகால்களை சுத்தம் செய்வதை இயந்திரமயமாக்குவதை உறுதி செய்வதற்கான வழிமுறைகளை உள்ளடக்கியது.
இந்தச் சுத்திகரிப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக தொழிலாளர்கள் உயிரிழந்தால், அந்த வழக்கில் ஒப்பந்ததாரர்கள் மட்டுமின்றி குடிமை அமைப்பின் தலைவர் (மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பஞ்சாயத்து ஒன்றிய ஆணையர்கள்) மீது முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்ய நீதிமன்றம் பரிந்துரைத்தது.
தற்போது, உயிரிழப்பு வழக்குகளில் மட்டுமே முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப் படுகின்றன என்பதோடு அதுவும் "குற்றம் சுமத்துவதற்கு ஏதுவான ஒருவரை, பொதுவாக ஒரு ஒப்பந்தக் காரரின் கீழ்நிலை ஊழியரை அடையாளம் கண்டு அவர் மீதே பழி சுமத்தப் படுகிறது".
கழிவகற்றல் பணியில் உயிரிழக்கும் தொழிலாளர்களின் குடும்பத்திற்கு வழங்கப் படும் இழப்பீட்டுத் தொகையை 10 லட்சத்தில் இருந்து 20 லட்சமாக உயர்த்த நீதிமன்றம் பரிந்துரைத்துள்ளது.
2023 ஆம் ஆண்டு கழிவுகளை வெறும் கைகளால் அள்ளும் பணியில் மக்கள் பணி அமர்த்தப் படுவதைத் தடைசெய்தல் மற்றும் அவர்களது மறுவாழ்வுச் சட்டத்தினைக் கடுமையான முறையில் செயல்படுத்துவதையும், அந்தச் சட்ட விதிமுறைகளுக்கு இணங்குவதையும் உறுதி செய்யுமாறு அதிகாரிகளை வலியுறுத்துகிறது.
2024 ஆம் ஆண்டு ஜனவரி 23 ஆம் தேதியன்று வெளியிடப்பட்ட அரசாணையின் மூலம் மனிதக் கழிவகற்றல் பணியில் ஈடுபடும் போது ஏற்படும் உயிரிழப்புகளுக்கான இழப்பீடு 10 இலட்சம் ரூபாயில் இருந்து 30 இலட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டது.