கொசுக்களை ஒழிக்க 'ஆயில் உருண்டை' வீசும் திட்டம்: தமிழகத்தில் முதன்முறையாக வேலூர் மாநகராட்சி அறிமுகம்
August 10 , 2017 2664 days 1146 0
தேங்கிய நீரில் உற்பத்தியாகும் கொசுக்களால் நோய்கள் பரவுவதைத் தடுக்கும் நோக்கில் மாநிலத்திலேயே முதல்முறையாக ஆயில் உருண்டை பந்துகள் வீசி கொசுக்களை அழிக்கும் திட்டத்தை வேலூர் மாநகராட்சி அறிமுகப்படுத்தியுள்ளது.
சாக்கடை நீரில் உற்பத்தியாகும் கொசுக்கள் மூலம் யானைக்கால் நோயும், சுத்தமான தேங்கிய மழைநீரில் உற்பத்தியாகும் ஏடிஸ் கொசுக்கள் மூலம் டெங்கு, மலேரியா போன்ற காய்ச்சல் நோய்களும் பரவுகின்றன. சாக்கடை, தேங்கிய நீரில் உற்பத்தியாகும் கொசுக்களை அழிக்க மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சி நிர்வாகங்கள் கொசு மருந்து தெளிப்பது உள்ளிட்ட பல்வேறு பணிகளைச் செய்த போதிலும் அவற்றை முழுமையாக ஒழிக்க முடியவில்லை.
இந்நிலையில், மரத்தூள்களை என்ஜின் கழிவு எண்ணெய், தேங்காய் எண்ணெய் ஆகியவற்றைக் கலந்து உருண்டையாக்கித் துணிப் பைகளில் கட்டி சாக்கடை, தேங்கிக் கிடங்கும் நீரில் வீசினால் அதிலிருந்து நீரில் பரவும் ஆயில் மூலம் ஈர்க்கப்பட்டு கொசுக்களை எளிதில் ஒழிக்க முடிவதோடு, கொசுக்கள் உற்பத்தியை முற்றிலும் தடுக்க முடியும். மற்ற மாநகராட்சிகளுக்கு முன்மாதிரியாக விளங்கும் வகையிலான இத்திட்டத்தை வேலூர் மாநகராட்சி நிர்வாகம் அறிமுகப்படுத்தியுள்ளது.