ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் நடைபெற்று வரும் சர்வதேச துப்பாக்கிச் சுடுதல் விளையாட்டுக் கூட்டமைப்பின் (International Shooting Sport Federation-ISSF) ஜீனியர் உலகக் கோப்பை போட்டியில் 25 மீட்டர் பிஸ்டல் பிரிவில் இந்தியாவின் முஷ்கான் பன்வாலா தங்கம் வென்றுள்ளதன் மூலம் சீனாவைப் பின்னுக்குத் தள்ளி பதக்கப் பட்டியலில் இந்தியா முன்னிலை பெற்றுள்ளது.
இறுதிப் போட்டியில் சீனாவின் குய்ன் ஷிஹாங் மற்றும் தாய்லாந்தின் கன்யகோர்ன் ஆகியோரை வீழ்த்தி இந்தியாவின் முஷ்கான் பன்வாலா தங்கம் வென்றுள்ளார். அவர்கள் முறையே வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களை பெற்றுள்ளனர்.
மேலும் இந்தத் தொடரில் இந்தியாவின் முஷ்கான், மனு பகேர், தேவன் ஷிரானா ஆகியோர் அடங்கிய இந்திய அணி அணிகளுக்கான போட்டிப் பிரிவில் தங்கப் பதக்கத்தை வென்றுள்ளது.
இதுவே இந்தியாவின் முஷ்கான் பன்வாலா மற்றும் சீனாவின் குய்ன் ஷிஹாங் ஆகியோருக்கு முதல் ISSF பதக்கமாகும்.
முஷ்கான் பெற்றுள்ள இத்தங்கப் பதக்கமானது வரலாற்றுப் புகழ்பெற்ற இந்த உலகக் கோப்பைப் போட்டியில் இந்தியாவினுடைய நான்காவது தனிநபர் தங்கமாகும்.
மேலும் இப்போட்டியில் இந்தியத் துப்பாக்கிச் சுடும் வீரரும் முஷ்கான் பன்வாலாவினுடைய சகோதரருமான அனிஷ் இரு தங்கங்களை வென்றுள்ளார். இதன் மூலம் ISSF ஜீனியர் உலகக் கோப்பையின் ஒரே பதிப்பில் தங்கப் பதக்கங்களை வென்றுள்ள உலகின் ஒரே உடன்பிறப்புகள் (Siblings) என்ற பெருமையை முஷ்கான் மற்றும் அனிஷ் பெற்றுள்ளனர்.