சட்ட ஆணையம் தனது சமீபத்திய 273 ஆவது அறிக்கையில், சித்ரவதைக்கு எதிரான ஐ.நா.வின் உடன்படிக்கைக்கு பின்னேற்பளிக்கவும், பொது மக்களை சித்ரவதை செய்வதாக தண்டனைக்கு உள்ளாகும் அரசு அதிகாரிகளுக்கு ஆயுள் தண்டனை அளிக்கவும் மத்திய அரசுக்கு பரிந்துரை அளித்துள்ளது .அதனோடு சித்ரவதைக்கு எதிரான மசோதா 2017 க்கு முன்மொழிவையும் அளித்துள்ளது.
மத்திய சட்டத் துறை அமைச்சகத்திற்கு சட்ட ஆணையம் அளித்துள்ள அறிக்கையில், பாதிக்கப்படுபவர்களுக்கு இழப்பீடும், சாட்சியங்களுக்கான பாதுகாப்பினையும் வழங்குவதற்கான சட்டக் கூறுகளுக்கு இடமளிப்பதற்காக இந்திய குற்றவியல் நடைமுறைச் சட்டம் – 1973, மற்றும் இந்திய சாட்சியச் சட்டம் 1872-ல் திருத்தங்களை கோரி பரிந்துரை செய்துள்ளது.
UNCAT- United Nations Convention Against torture (சித்ரவதைக்குஎதிரானஐ,நாவின்உடன்படிக்கை)
சித்ரவதைக்கு எதிரான ஐ.நா.வின் உடன்படிக்கை ஆனது சித்ரவதை மற்றும் பிற கொடூர, மனிதத்தன்மையற்ற, சீரழிவு தண்டனைக்கு எதிரான ஐ.நா. உடன்படிக்கை என்றும் அழைக்கப்படும்.
இது உலகம் முழுவதும் சித்ரவதை, பிற கொடூர செயல்பாடுகள், மனிதத்தன்மையற்ற செயல்கள், சீரழிவுத் தண்டனைகள் போன்றவை நடைபெறுவதைத் தடுக்க ஐ.நா.வின் கண்காணிப்பின் கீழ் செயல்படும் சர்வதேச மனித உரிமைகளுக்கான ஒப்பந்தமாகும்.
பாகிஸ்தான், சீனா, ஆப்கானிஸ்தான் உட்பட 161 நாடுகள் இந்த ஒப்பந்தத்திற்கு பின்னேற்பளித்துள்ளன (Ratification).
1997-ல் இந்தியா இவ்வொப்பந்தத்தில் கையெழுத்திட்டது, ஆனால் இது வரை பின்னேற்பளிக்கவில்லை.
உலகம் முழுவதும் இந்தியாவோடு சேர்ந்து மொத்தம் 9 நாடுகள் இந்த முக்கியமான உடன்படிக்கைக்கு பின்னேற்பளிக்காமல் உள்ளன.