2023-ஆம் ஆண்டிற்குப் பிறகும் சீனாவின் அதிபராக ஜீ ஜின்பிங் தொடர வழிவகை செய்யும் விதமாக, அதிபர் பதவியில் உள்ள வரம்பை நீக்க நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்தில் சீனா வரலாற்று சட்டத் திருத்தத்தைக் கொண்டு வந்துள்ளது.
இதற்காக 'புதிய காலகட்டத்துக்கான சீன பாணி சோஷலிசம் குறித்த ஜீ ஜின்பிங்கின் சிந்தனைகள்' ('Socialism with Chinese Characteristics for a New Era') சீனாவின் அரசியலமைப்பு கொள்கை சாசனத்தில் இணைக்கப்பட்டுள்ளது.
சீனாவில் அதிபரின் பதவிக் காலம் ஐந்து ஆண்டுகளாகும்.
முன்னாள் சீன அதிபரான டெங் ஜியோபிங்கினால் 1982 ஆம் ஆண்டு பதவி வரம்பு கொண்டு வரப்பட்டது. அதன்படி ஒருவர் 10 ஆண்டுகள் மட்டுமே அதாவது 2 முறை மட்டுமே அதிபராக இருக்க முடியும்.
மேலும் தேசிய கண்காணிப்பு ஆணையம் (National Supervisory Commission) எனும் புதிய ஊழல் ஒழிப்பு அதிகார நிறுவனம் (anti-graft super agency) ஒன்றை ஏற்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
அனைத்து அரசு பொதுப் பணியாளர்கள், அரசு அதிகாரிகள், மேலாளர்கள் முதல் ஆசிரியர்கள், இதழாளர்கள், மற்றும் மருத்துவர்கள் வரை அனைவரையும் சீன தேசியக் கட்சியின் ஊழல் கண்காணிப்புப் பிரிவு கண்காணிக்கும் வகையில் அதனுடைய அதிகாரத்தை இந்த ஆணையம் விரிவுபடுத்தும்.