அக்டோபர் 18-ம் தேதி சீன தலைநகர் பீஜிங்கில் சீனாவின் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய மாநாடு தொடங்கியது. இம்மாநாடு 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும். இந்த மாநாடானது அக்டோபர் 24 அன்று நிறைவு பெறும். அப்போது புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவார்.
370 முழு மற்றும் மாற்று உறுப்பினர்களை கொண்ட மத்திய உயர்மட்ட குழு இம்மாநாட்டில் தேர்ந்தெடுக்கப்படும். முழு நேர உறுப்பினர்கள் ஓட்டளிக்கும் உரிமையை பெற்றிருப்பர். இவர்கள் பல்வேறு துறைகளிலிருந்து செயல்படும் 2287 பிரதிநிதிகளால் தேர்ந்தெடுக்கப்படுவர். இவர்களுள் விவசாயிகள், கல்வியாளர்கள், சிறப்பு தொழில் செய்பவர்கள் ஆகியோர் அடங்குவர். இவ்வாறு தேர்ந்தெடுக்கப்படும் முழுநேர உறுப்பினர்கள் இம்மாநாட்டிற்கு முன்பாகவே அவர்களின் பின்புலத்தை சரிபார்த்து கம்பூனிஸ்ட் கட்சியின் மீது மிகுந்த பற்று மற்றும் சரியான அரசியல் பார்வை மற்றும் நேர்மை போன்றவற்றை பரிசீலித்த பின்பு தேர்தலில் அனுமதிக்கப்படுவர்.
சீன கம்யூனிஸ்ட் கட்சியானது 89 மில்லியன் உறுப்பினர்களை கொண்டது. கம்யூனிஸ்ட் கட்சியின் உயர்மட்டத்தில் உள்ள இந்த அமைப்புகள் கட்சியின் கட்டமைப்பில் காலத்திற்கு ஏற்ப மாற்றங்களை ஏற்படுத்தும். இவற்றுள் 25 உறுப்பினர்களை கொண்ட கட்சியின் அரசியல் விவகாரக்குழு (Politburo) , 7 உறுப்பினர்கள் கொண்ட அரசியல் விவகாரத்தின் நிலைக்குழு (Politburo Standing Committee), 2012 இல் ஆரம்பிக்கப்பட்டு அரசியல் நடைமுறைக்கு வந்த மத்திய ஓழுங்கு நடவடிக்கை கண்காணிப்பு குழு போன்றவை அடங்கும்.
அரசியல் விவகாரக்குழுவின் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்பு அரசியல் விவகாரக்குழுவானது சீனாவின் உயர்மட்ட தலைவர்களை அரசியல் விவகார நிலைக்குழுவிற்கு தேர்ந்தெடுக்கும்.
இந்த மாநாடு கம்யூனிஸ்ட் கட்சியின் கொள்கையை விட சித்தாந்தத்தை அதிகமாக பின்பற்றுகிறது. மேலும் சீன வளர்ச்சிக்கு தேவையான எதிர்கால திட்டங்களை இது வகுக்கிறது.
1982ம் ஆண்டு நடைபெற்ற கம்யூனிஸ்ட் கட்சியின் 12-வது மாநாட்டில் புகழ்பெற்ற தலைவரான டங் சியாவுபிங்கின் (Deng Xiaoping) பொதுவுடைமை சார்ந்த தாராள பொருளாதாரம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.
2007ம் ஆண்டு நடைபெற்ற கம்யூனிஸ்ட் கட்சியின் 17வது மாநாட்டில் ஜி சின்பிங் (Xi Jinping) அரசியல் விவகார நிலைக்குழுவிற்கு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 5 ஆண்டுகளுக்கு பின்பு கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராக பொறுப்பேற்று கொண்டார். இது அவர் நாட்டின் அடுத்த தலைவர் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட உள்ளதாக உலகிற்கு கட்டியம் கூறியது.
2013ம் ஆண்டு இவர் சீன அதிபராக பதவியேற்றார்.
2017 மாநாட்டின்முடிவுகள்
சீனாவின் ஆளும் கட்சியான கம்யூனிஸ்ட் கட்சி சீன அதிபர் ஜி சின்பிங்கிற்கு 2-வது முறையாக 5 ஆண்டு பதவிக்காலம் வழங்கியுள்ளது. மேலும் கட்சியின் அரசியல் சாசனம் திருத்தம் செய்யப்பட்டு அவரின் பெயரையும், கொள்கையையும் அரசியல் சானத்தில் சேர்த்துள்ளது. இதற்கு முன்பு மா சே துங் (Mao Zedong) மற்றும் டங் சியாவுபிங் ஆகியோரின் கொள்கைகள் மட்டுமே இதில் இடம் பெற்றிருந்தன.
5 ஆண்டுகளுக்கு பிறகு ஒரு வாரம் நடைபெற்ற மாநாட்டின் முடிவில் ஜி சின்பிங்கிற்கு கொள்கையான புதிய அத்தியாயத்திற்கான சீன பண்புகளை கொண்ட பொதுவுடைமை என்பது அரசியல் சாசனத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. இதை சேர்ப்பதற்காக அரசியல் சாசனத்தில் திருத்தம செய்வதற்கான தீர்மானம் இயற்றப்பட்டது.
சீன கம்யூனிஸ்ட் கட்சியில் அடுத்த 5 ஆண்டுக்கான புதிய மத்தியக்குழு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இந்த மத்தியக் குழுவானது முதல் ஆண்டு கூட்டத்தில் அரசியல் விவகாரக்குழு உறுப்பினர்களையும், அரசியல் விவகார நிலைக்குழு உறுப்பினர்களையும், கட்சியின் பொதுச் செயலாளரையும் தேர்ந்தெடுக்கும்.
கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராக உள்ள சீன அதிபர் ஜின் பிங் தலைமையில் அமைந்துள்ள இந்த குழு மாநாட்டிற்குப் பின் புதிதாக வெளி உலகிற்கு முழுமையாக அறிமுகப்படுத்தப்படும்.