ஆறு வருட கால அளவிலான செக்யூர் இமாலயா என்ற திட்டத்தை மத்திய அரசு ஆரம்பித்துள்ளது.
இது உள்ளூர் அளவிலும் உலக அளவிலும் முக்கியத்துவம் வாய்ந்த பல்லுயிர்த்தன்மை, நில மற்றும் வன வளங்களை பாதுகாப்பதை உறுதி செய்ய ஆரம்பிக்கப்பட்டதாகும்.
இமயமலையின் உயர் பல்லுயிர்ச் சூழல் பரவியுள்ள மாநிலங்களான இமாச்சல பிரதேசம், ஜம்மு காஷ்மீர், உத்தரகாண்ட் மற்றும் சிக்கிம் ஆகிய மாநிலங்களில் இது மத்தியச் சுற்றுச்சூழல் அமைச்சகத்தால் ஐ.நா. மேம்பாட்டுத் திட்டத்தின் உதவியுடன் உலக வனவிலங்கு திட்ட மாநாட்டிற்கான துவக்க விழாவின் போது தொடங்கப்பட்டது.
இதனுடைய மற்றொரு நோக்கம் பனிச்சிறுத்தை மற்றும் மற்ற அருகிவரும் உயிரினங்களையும் அதன் வாழ்விடங்களை பாதுகாப்பதாகும்.
சங்தங் (ஜம்மு-காஷ்மீர்), லாஹௌல் – பங்கி மற்றும் கின்னௌர் (ஹிமாச்சல பிரதேசம்) கஞ்சென்ஜங்கா – உயர்மட்ட டீஸ்டா பள்ளத்தாக்கு (சிக்கிம்), கங்கோத்ரி – கோவிந்த் மற்றும் தர்மா – பயன்ஸ் பள்ளத்தாக்கு போன்ற பகுதிகளை உள்ளடக்கிய குறிப்பிட்ட நிலப்பரப்புகளில் நீடித்த பயன்பாடு, வாழ்வாதார பாதுகாப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, இமயமலையின் உயர்பகுதிகளில் சூழியலமைப்பின் மறுசீரமைப்பு போன்றவற்றை இத்திட்டம் மையமாகக் கொண்டது.
இந்நிலப் பகுதிகளில் உள்ள மிகவும் அழிவின் அச்சுறுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ள மருத்துவ மற்றும் நறுமண தாவரங்களின் சட்டவிரோத வர்த்தகத்தை ஒழிப்பதும் இதன் நோக்கமாகும்.
மேலும் இந்நிகழ்ச்சியின் போது சுற்றுப்புற அமைச்சகமானது இந்திய வனவிலங்குகள் பற்றிய அலைபேசி செயலியையும், 250 திட்டங்கள் மற்றும் 103 வனவிலங்குகள் பாதுகாப்பு செயல்பாடுகள் மூலம் நீடித்த மேம்பாடு மற்றும் வனவிலங்குகளின் மரபியர் பல்வகைத் தன்மையை பாதுகாத்தலை மையமாக கொண்ட 15 வருட கால அளவுடைய “தேசிய வனவிலங்குகள் செயல்திட்டம் 2017-2031” – ஒன்றையும் வெளியிட்டுள்ளது.