ஜெம்கோவாக்-19 என்ற ஜென்னோவா mRNA அடிப்படையிலான ஒரு தடுப்பூசியானது, உள்நாட்டிலேயேத் தயாரிக்கப்பட்ட இந்தியாவின் முதல் mRNA கோவிட்-19 தடுப்பூசி ஆகும்.
2-8 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் கூட சேமிக்கப்படும் போதிலும் சிதைவுறாமல் இருக்கும் முதல் mRNA தடுப்பூசி இதுவாகும்.
மற்ற mRNA தடுப்பூசிகளில் பெரும்பாலானவற்றைச் சுழிய நிலைக்கும் கீழான வெப்ப நிலையில் சேமிக்கப்பட வேண்டும்.
இது 18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து வயதினருக்கும், அவசரகாலச் சூழ்நிலைகளில் பயன்படுத்துவதற்காக அதன் அவசரகாலப் பயன்பாட்டிற்கான ஒரு அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது.
இந்தியத் தலைமை மருந்துக் கட்டுப்பாட்டு வாரியம் ஆனது இதற்கான ஒப்புதலை அளித்துள்ளது.
இது புனேவைச் சேர்ந்த ஜென்னோவா என்ற உயிரி மருந்துத் தயாரிப்பு நிறுவனத்தால் உருவாக்கப் பட்டது.
mRNA என்பது புரதங்களின் உற்பத்திக்குப் பயன்படுத்தப்படும் செல்களில் காணப் படும் RNA வகையான ஒரு தூது RNAவின் சுருக்கமாகும்.
mRNA தடுப்பூசியானது, நமது உடலுக்குள் நோய் எதிர்ப்பு சக்தியைத் தூண்டும் ஒரு புரதத்தை எவ்வாறு உருவாக்குவது என்பது பற்றி நமது செல்களுக்குக் கற்றுக் கொடுக்கிறது.
mRNA தடுப்பூசிகள் நமது உடலில் ஊடுருவும் வைரசிற்கு எதிராக போராடுவதற்கான செல்களைச் செயல்படச் செய்வதன் மூலம் தொற்று நோய்களிலிருந்து நம்மைப் பாதுகாக்கிறது.
நோயெதிர்ப்புச் செயல்முறை என்பது குறிப்பிட்ட ஒரு புரதத்தைக் குறி வைத்து உடலில் ஊடுருவும் வைரஸை எதிர்த்துப் போராடத் தேவையான ஆன்டிபாடிகளை (எதிர்ப் புரதங்களை) உருவாக்க வழிவகுக்கிறது.
mRNA அடிப்படையிலான கோவிட்-19 தடுப்பூசிகள், இணைப்புப் புரதம் எனப்படும் புரதத்தினை உருவாக்குவதற்கு செல்களுக்கு அறிவுறுத்தல்களை அனுப்புகின்றன.
இது புதிய கொரோனா வைரசின் மேற்பரப்பில் உள்ள புரதத்தினைப் போன்றது.
இந்தப் புரதங்கள் அவை மேலும் பிரதி எடுக்கும் நிகழ்வினைத் தடுக்கும் வகையில் வடிவமைக்கப் பட்டுள்ளன.
பைசர் பயோன்டெக் மற்றும் மாடெர்னா கோவிட்-19 தடுப்பூசிகள் ஆகிய இரண்டும் mRNA தடுப்பூசிகள் ஆகும்.
ஹைதராபாத்தைச் சேர்ந்த பயோலாஜிக்கல் இ என்ற நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட கார்பிவாக்ஸ் கோவிட்-19 தடுப்பூசி குழந்தைகளுக்கு வழங்கப்படுகிறது.