கேலபோகஸ் தீவுகளில் ஏற்படும் ஆறு தொடர்ச்சியான வறட்சிகள் ஒரு புதிய வகை பறவையினங்கள்தோன்றுவதற்கு வழி வகுக்கும் என்று அறிவியல் ஆய்வாளர்கள் வெளிப்படுத்தியுள்ளனர்.
இந்தத் தீவிர நிகழ்வுகளால் பறவைகளில் ஏற்படும் உடலியல் மாற்றங்கள் சில புதிய பறவைஇனங்கள் உருவாவதற்கான "பாதையை வழங்குகிறது".
ஈக்வடார் (நில நடுக்கோட்டு) நாட்டு மாகாணமான கேலபோகஸ், ஒட்டு மொத்தமாக டார்வின்ஸ் ஃபிஞ்சுகள் என்று அழைக்கப்படுகின்ற அதன் பலதரப்பட்டப் பறவை இனங்களுக்குப் புகழ்பெற்றது.
பிரிட்டிஷ் இயற்கை ஆர்வலர் சார்லஸ் டார்வினுக்கு இயற்கைத் தேர்வின் விளைவான பரிணாமத்தைப் புரிந்து கொள்ள உதவுவதில் இவற்றின் பங்கின் காரணமாக இவை இப்பெயர் கொண்டு அழைக்கப்படுகின்றன.
டார்வின்ஸ் ஃபிஞ்சுகள், தோராயமாக 18 வெவ்வேறு பாசரைன் பறவை இனங்களை உள்ளடக்கிய ஒரு குழுவாகும்.
அவை அவற்றின் அலகுகளின் அளவு மற்றும் செயல்பாடு ஆகியவற்றில் உள்ள சில குறிப்பிடத் தக்க மாறுபாட்டிற்காக தனித்துவமாகக் குறிப்பிடப்படுகின்றன.