அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பதவியேற்ற உடனேயே ஏராளமான செயலாக்க ஆணைகள் /நிர்வாக உத்தரவுகள் மற்றும் கட்டளைகளை வெளியிட்டார்.
2021 ஆம் ஆண்டு ஜனவரி 06 ஆம் தேதியன்று அமெரிக்கத் தலைநகரை முற்றுகை இட்ட சுமார் 1,500 பேருக்கு அவர் மன்னிப்பு வழங்கினார்.
அமெரிக்க-மெக்சிகோ எல்லையில் நிகழும் சட்ட விரோதக் குடியேற்றத்தினை தேசிய அவசரநிலையாக அறிவிக்கச் செய்து, அக்குற்றவியல் கூட்டமைப்புகளைத் தீவிரவாத அமைப்புகளாக அறிவிக்கும் உத்தரவுகளில் அவர் கையெழுத்திட்டார்.
பதவியேற்ற முதல் நாளில், அதிபர் டிரம்ப் முந்தைய பைடன் ஆட்சியின் 78 நிர்வாக நடவடிக்கைகளை ரத்து செய்தார்.
உலக சுகாதார அமைப்பிலிருந்து அமெரிக்காவை வெளியேற்றுவதற்கான தனது ஒரு பிரச்சார வாக்குறுதியையும் அவர் நிறைவேற்றினார்.
உலகளாவிய சுகாதார தயார்நிலை மற்றும் எதிர் நடவடிக்கைகளுக்காக ஆண்டிற்கு சுமார் 130 மில்லியன் டாலர்களை வழங்கச் செய்வதுடன் அமெரிக்க நாடானது உலக சுகாதார அமைப்பின் முதன்மையான நிதி நன்கொடை நாடாக உள்ளது.
பாரிசு பருவநிலை மாற்ற உடன்படிக்கையிலிருந்து விலகும் முக்கிய ஆணையிலும் அவர் கையெழுத்திட்டார்.
அரசாங்கப் பணியமர்த்தல் மற்றும் புதிய கூட்டாட்சி விதிமுறைகளை முடக்கும் சில உத்தரவுகளில் அவர் கையெழுத்திட்டார்.
உத்தி சார் எண்ணெய் இருப்புக்களை நிரப்புவதாகவும், உலகம் முழுவதும் அமெரிக்க எரிசக்தியை ஏற்றுமதி செய்வதாகவும் நன்கு உறுதியளித்து, அவர் தேசிய எரிசக்தி அவசர நிலையை அறிவித்தார்.
கனடா மற்றும் மெக்சிகோ மீது, பிப்ரவரி 01 ஆம் தேதி முதல் அமலுக்கு வருகின்ற 25 சதவீதச் சுங்க வரிகளை விதிக்கும் உத்தரவிலும் கையெழுத்திட்டார்.
'மெக்சிகோ வளைகுடா'வை 'அமெரிக்க வளைகுடா' என்று மறுபெயரிடுவதற்கான ஒரு உத்தரவிலும் அவர் கையெழுத்திட்டார்.
மவுண்ட் டெனாலியின் பெயரைத் திரும்பவும் 'மவுண்ட் மெக்கின்லி' என்று மாற்றவும் அவர் உத்தரவிட்டார்.
பைடனின் ஆட்சியின் கீழ் சுமார் 1 மில்லியன் புலம்பெயர்ந்தோருக்கு அவர்களுக்கான சட்டப்பூர்வ நுழைவை எளிதாக்கிய CBP One என்ற ஒரு செயலியை அவர் ரத்து செய்து உத்தரவிட்டார்.
அங்கு கூட்டாட்சி அரசானது இரண்டு பாலினங்களை (ஆண் மற்றும் பெண்) மட்டுமே அங்கீகரிக்கும் என்று அறிவித்து, திருநர்களுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பினையும் ரத்து செய்து அவர் உத்தரவிட்டார்.
அமெரிக்காவின் 45வது அதிபராக அவரது முதல் பதவிக்காலத்தில், டிரம்ப் சுமார் 220 செயலாக்க உத்தரவுகளில் கையெழுத்திட்டார்.