டெங்கு வைரஸ் பரவுவதை முன்கூட்டியே கண்டறிய புதிய தொழில்நுட்பம்
September 3 , 2017 2673 days 891 0
இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நிலவும் தட்பவெப்ப நிலையின் அடிப்படையில், டெங்கு காய்ச்சலுக்கான வைரஸ் பரவுவதைக் கண்டறிவதற்கு புதிய தொழில்நுட்ப முறையை பிரிட்டனில் உள்ள லிவர்பூல் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களும், ஹைதராபாதில் உள்ள இந்திய ரசாயன தொழில்நுட்பக் கல்வி நிறுவனம், குவாஹாட்டியில் உள்ள தேசிய மருந்தியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் ஆய்வாளர்களும் இணைந்து உருவாக்கியுள்ளனர்.
அவர்கள், பல்வேறு மாநிலங்களில் நிலவும் தட்பவெப்ப நிலையின் அடிப்படையில், டெங்கு வைரஸ் எப்படி பரவுகிறது என்பதை ஆய்வு செய்துள்ளனர்.
கொசுவின் உடலில் டெங்கு வைரஸ் பல்கிப் பெருகுவதில், அந்தப் பகுதியின் தட்பவெப்ப நிலை முக்கியப் பங்கு வகிக்கிறது. ஒரு பிராந்தியத்தின் தட்பவெப்ப நிலை குறைவாக (17-18) டிகிரி செல்சியஸ்) இருந்தால், அந்தப் பிராந்தியத்தில் உள்ள கொசுக்களின் உடலில் டெங்கு வைரஸ் பல்கிப் பெருவதற்கு அதிக நாள்கள் ஆகும். இதனால், டெங்கு வைரஸ் பரவுவது குறைகிறது.
அதேநேரம், ஒரு பிராந்தியத்தின் தட்பவெப்ப நிலை அதிகமாகும்போது (17 முதல் 30 டிகிரி செல்சியஸ்), அந்தப் பிராந்தியத்தில் உள்ள கொசுக்களின் உடலில் குறைந்த நாள்களில், டெங்கு வைரஸ் பல்கிப் பெருகுகிறது.
இதனால், அதிக அளவில் டெங்கு வைரஸ் பரவுகிறது.
இந்த நிலையில், இந்தியாவில் மழைப் பொழிவிற்கும், டெங்கு வைரஸ் பரவுவதற்கும் இடையே அதிக தொடர்புகள் இருப்பதை ஆராய்ச்சியாளர்கள் கவனித்திருக்கிறார்கள்.
அதன்படி, பெரும்பாலான மாநிலங்களில் மழைக்காலத்தில், குறுகிய நாள்களிலேயே அதிக அளவில் டெங்கு வைரஸ் பரவுவதை அவர்கள் கண்டறிந்துள்ளனர்.