தனி நாடு உருவாக்கியதாக உக்ரைன் கிளர்ச்சியாளர்கள் அறிவிப்பு
July 19 , 2017 2729 days 1181 0
உக்ரைனில் கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள கிழக்குப் பகுதியில் தனி நாடு உருவாக்கியதாக அறிவிக்கப்பட்டது.
டோனெட்ஸ்க் மக்கள் குடியரசின் தலைவர் அலெக்ஸாண்டர் ஸகர்சென்கோ வெளியிட்ட அறிக்கையின்படி, டோனெட்ஸ்க், லுஹான்ஸ்க் பகுதிகள் இணைந்த புதிய நாடு உருவாக்கப்படுகிறது. "மலோரோஸியா" என்பது அதன் பெயர்.
அந்த நாட்டுக்கான புதிய அரசியல் சாசனம் விரைவில் இயற்றப்படும். அதையடுத்து, மலோரோஸியா மக்களின் ஒப்புதலினைப் பெறுவதற்கான வாக்கெடுப்பு நடைபெறும்.
தனி நாட்டுக்கான அனைத்து நடவடிக்கைகளும் மூன்று ஆண்டுகளில் பூர்த்தியாகும் என்றும் அவர் கூறியுள்ளார்.
"மலோரோஸியா" என்றால் "குட்டி ரஷியா" என்று பொருள்.
இந்த விவகாரம் குறித்து, கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதங்கள் உள்ளிட்ட உதவிகளை அளித்து வரும் ரஷியா எந்தக் கருத்தையும் வெளியிடவில்லை.
உக்ரைனின் கிழக்குப் பகுதியில் ரஷிய மொழி பேசுவோர் பெரும்பான்மையாக உள்ளனர்.
சோவியத் யூனியன் அமைப்பில் இணைந்திருந்த போது எந்தப் பிரச்சினையையும் அவர்கள் எதிர்கொள்ளவில்லை. ஆனால், சமீப காலமாக ரஷிய மொழி பேசுவோரை உக்ரைன் மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்துகிறது என்று அவர்கள் புகார் கூறி வந்தனர்.
இதையடுத்து, ஆயுதக் கிளர்ச்சி தொடங்கியது. உக்ரைனின் உள்நாட்டுச் சண்டையில் பத்தாயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகினர்.
ரஷியாவின் மறைமுக ஆதரவுடன் அந்நாட்டின் எல்லையையொட்டிய கிழக்கு உக்ரைன் பகுதிகளான டொனெட்ஸ்க், லுஹான்ஸ்க் ஆகியவற்றை கிளர்ச்சியாளர்கள் தங்களது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர்.
டொனெட்ஸ்க் குடியரசு, லுஹான்ஸ்க் மக்கள் குடியரசு உருவானதாக கிளர்ச்சியாளர்கள் கடந்த ஆண்டு அறிவித்தனர். அப்பகுதிகளில் அவர்கள் ஏற்கெனவே தேர்தல் நடத்தி ஆட்சி புரிந்து வருகின்றனர். ஆனால் இதனை உக்ரைன் அங்கீகரிக்கவில்லை.
உக்ரைன், ஜெர்மனி, ரஷியா முன்னிலையில் உக்ரைன் அரசுக்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே நடைபெற்ற அமைதிப் பேச்சுவார்த்தையின் முடிவில், ரஷிய மொழி பேசுவோர் பகுதியில் கூடுதல் தன்னாட்சி அதிகாரம் வழங்க உடன்படிக்கை ஏற்பட்டது. ஆனாலும், இது முழு செயல்பாட்டுக்கு வரவில்லை. கிழக்கு உக்ரைன் பகுதி கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டிலேயே இருந்து வருகிறது.
இந்த நிலையில், இரு பகுதிகளும் இணைந்த மலோரோஸியா என்னும் தனி நாடு உருவானதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
கிழக்கு உக்ரைனில் பிரிவினைவாதத்தைத் தூண்டி, கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதங்கள் வழங்கி உதவி செய்து வருவதாக குற்றம் சாட்டி, ரஷியா மீது கடுமையான பொருளாதாரத் தடைகளை அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய யூனியன் நாடுகள் விதித்துள்ளன என்பது நினைவுகூரத்தக்கது.