76வது சுதந்திரத் தின விழாவுடன், நாட்டின் மற்றொரு மைல்கல் நிகழ்வும் ஒன்று இணைந்து அனுசரிக்கப் படுகிறது.
அது 50 ஆண்டுகளுக்கு முன்பு, 1972 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 அன்று தபால் குறியீட்டு எண் இந்தியாவில் அறிமுகப் படுத்தப்பட்டதைக் குறிக்கிறது.
தபால் துறையின் கூற்றுப்படி, சுதந்திரத்தின் போது இந்தியாவில் குறிப்பாக நகர்ப் புறங்களில் 23,344 தபால் நிலையங்கள் இருந்தன.
தபால் குறியீட்டு எண்ணானது, பெரும்பாலும், ஒரு மாதிரியான பெயர்களைக் கொண்ட வெவ்வேறு இடங்கள் அமைந்துள்ள ஒரு நாட்டில் அஞ்சல்களை வரிசைப் படுத்துதல் மற்றும் விநியோகம் ஆகியவற்றை எளிதாக்கச் செய்வதற்கும், பல்வேறு மொழிகளில் எழுதப்படும் கடிதங்களை விநியோகிப்பதற்கும் உருவாக்கப்பட்டன.
தபால் குறியீட்டு எண் ஆனது 6 இலக்க எண்ணால் ஆனது.
முதல் எண் ஆனது வடக்கு, கிழக்கு, மேற்கு, தெற்கு என உள்ள தபால் மண்டலத்தினையும், எண் 9 ஆனது இராணுவத் தபால் சேவையையும் குறிக்கிறது.
இந்த முன்னெடுப்பின் பின்னணியாக இருந்த நபர், மத்தியத் தகவல் தொடர்பு அமைச்சகத்தின் முன்னாள் கூடுதல் செயலாளர் ஸ்ரீராம் பிகாஜி வேளான்கர் ஆவார்.
உலகளவில் அமெரிக்காவில் 1963 ஆம் ஆண்டு ஜூலை 01 அன்று மண்டல மேம்பாட்டுத் திட்டக் குறியீடானது (ZIP) அறிமுகப் படுத்தப்பட்டது.