TNPSC Thervupettagam

தமிழக நிதிநிலை அறிக்கை 2022 - முக்கிய அம்சங்கள்

March 21 , 2022 855 days 924 0
  • வருவாய் பற்றாக்குறையானது 4.61 சதவீதத்தில் இருந்து 3.80 சதவீதமாக குறைந்து  ₹7,000 கோடி ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.
  • 2014 ஆம் ஆண்டு முதல் அபாயகரமான அளவில் அதிகரித்து வரும் இந்த வருவாய்ப் பற்றாக்குறையானது இந்த ஆண்டில் தலைகீழான மாற்றத்தைச் சந்திக்கும்.
  • திருத்தப்பட்ட நிதிநிலை அறிக்கை மதிப்பீட்டில் 2021-22 ஆம் ஆண்டிற்கான வருவாய்ப் பற்றாக்குறை ஆனது ₹58,692.68 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • 2023 ஆம் ஆண்டு மார்ச் 31 அன்றைய நிலவரப்படி தமிழகத்தின் நிலுவைக் கடன் தொகை ₹6,53,348.73 கோடியாக இருக்கும்.
  • இது 2022-23 ஆம் ஆண்டின் மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தியில் 26.29% ஆகும்.
  • நிதிப் பற்றாக்குறையானது, கடந்த ஆண்டில் இருந்த 4.61 சதவீதத்தில் இருந்து 3.8 சதவீதமாகக் குறையும்.
  • தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக, பள்ளிக் கல்வித்துறைக்கு மாநில நிதிநிலை அறிக்கையில் அதிகபட்சமாக ரூ.36,895.89 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

முக்கிய முன்னெடுப்புகள்

  • பெண்களின் திருமணத்திற்குத் தங்கம் மற்றும் நிதியுதவி வழங்கி வந்த ‘தாலிக்கு தங்கம்’ என முன்பு அழைக்கப்பட்ட ஒரு திட்டமானது, உயர்கல்வி உறுதித் திட்டமாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
  • பெரியாரின் நூல்கள் மற்றும் படைப்புகளைப் பிற மொழிகளில் மொழிபெயர்ப்புச் செய்வதற்காக ₹5 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
  • தரமான மனநலச் சேவைகளை வழங்குவதற்காக, சென்னையின் கீழ்ப்பாக்கத்தில் உள்ள மனநலக் கழகத்தை மேம்படுத்தச் செய்வதன் மூலம், தமிழ்நாடு மனநலம் மற்றும் நரம்பியல் அறிவியல் நிறுவனத்தை நிறுவுவதற்கு அரசு திட்டமிட்டுள்ளது.
  • இந்த ஆண்டில், விழுப்புரம் மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் 10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய அருங்காட்சியகங்கள் கட்டப்படும்.
  • கிண்டி சிறுவர் பூங்காவை மறுவடிவமைத்து பறவைகள், வண்ணத்துப்பூச்சிகள், விலங்குகள் ஆகியவை அதில் உள்ளடங்கும் வகையில் ஒரு குழந்தைகள் இயற்கைப் பூங்கா அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
  • சென்னையில் உள்ள பேரிடர் முன்னெச்சரிக்கை அமைப்பை மேம்படுத்த மாநில அரசு ₹10 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.
  • இந்தியாவில் ஒரு மாநில அரசால் மேற்கொள்ளப்பட்ட இது போன்ற முதல் வகை முன்னெடுப்பு இதுவாகும்.
  • அரசுப் பள்ளி மாணவர்களை இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகம், இந்திய அறிவியல் கல்வி நிறுவனம், அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கல்வி நிறுவனம் போன்ற முதன்மையான உயர்கல்வி நிறுவனங்களில் சேரத் தூண்டும் வகையில், அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை படித்த மாணவர்களின் இளங்கலைக் கல்விக்கான முழுச் செலவையும் தமிழக அரசே ஏற்கும்.
  • மதுரவாயல் - சென்னைத் துறைமுகத்தின் மேம்படுத்தப்பட்ட வழித்தடத் திட்டத்தை தமிழக அரசு புதுப்பித்துச் செயல்படுத்தும்.
  • மாநிலத்தில் சிறப்பு சமூக ஊடகக் கண்காணிப்புப் பிரிவுகள் அமைக்கப்படும்.
  • இது சமூக ஊடகத் தளங்களில் பரவும் போலிச் செய்திகள் மற்றும் தவறான தகவல்களைத் தடுப்பதற்கான ஒரு முன்னெடுப்பாகும்.
  • பிரபலத் தமிழ் துறவியும் கவிஞருமான இராமலிங்க அடிகள் அல்லது வள்ளலாரின் 200வது பிறந்தநாளை நினைவு கூரும் வகையில், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் ஆதரவற்ற விலங்குகளைப் பராமரிக்க வழிவகுக்கச் செய்யும் வகையில் ‘வள்ளலார் பல்லுயிர்க் காப்பகங்கள்’ திட்டத்தை அரசு தொடங்கவுள்ளது.
  • தென்காசி மாவட்டத்தின் குற்றாலத்தில் உள்ள பழங்குடியினர் உள்தள  அருங்காட்சியகம், திருவள்ளூர் மாவட்டத்தின் பூண்டியில் உள்ள முந்தைய வரலாற்றுக் காலப் பொருட்களின்  உள்தள அருங்காட்சியகம், தருமபுரி மாவட்டத்தில் உள்ள நடுகற்கள் கொண்ட உள்தள அருங்காட்சியகம் ஆகியவை மேம்படுத்தப்படும்.
  • ஜெர்மனியின் KfW என்ற வங்கியின் உதவியுடன் அமல்படுத்தப்படும் 'தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களில் இயங்கும் பேருந்துகளைப் பருவநிலைக்கு  ஏற்ப நவீன மயம் செய்தல்' என்ற திட்டத்தின் கீழ், 2,213 BS-VI ரக புதிய டீசல் பேருந்துகள் மற்றும் 500 புதிய மின்சாரப் பேருந்துகள் வாங்கப்படும்.

குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை

  • குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் (MSMEs) துறைக்கான ஒதுக்கீடானது கிட்டத்தட்ட 48% வரை உயர்த்தப்பட்டது.
  • குறு நிறுவனங்களின் தொகுதிகளுக்கு உதவச் செய்யும் நோக்கில், ஒரு புதிய "குறு நிறுவனங்கள் தொகுதி மேம்பாட்டுத் திட்டமானது" தொடங்கப்பட உள்ளது.
  • காஞ்சிபுரம் மாவட்டத்தில் நரிக்குறவர்களால் மேற்கொள்ளப்படும் செயற்கை ஆபரணங்கள் தயாரிப்புத் தொழில், மதுரை மாவட்டத்தில் பொம்மைத் தயாரிப்புத் தொகுதிகள், திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சமையல் பாத்திரங்கள் தயாரிப்புத் தொகுதிகள் மற்றும் கடலூர் மாவட்டத்தில் உள்ள முந்திரி பதப்படுத்தும் தொழிற்சாலைத் தொகுதிகள், உள்ளிட்ட 20 சிறு குறு நிறுவனங்கள் தொகுதிகளை மேம்படுத்துவதற்கு ₹50 கோடி ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளதாக நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப் பட்டு உள்ளது
  • கோயம்புத்தூரில் தமிழ்நாடு தென்னை நார் தொழில் வளர்ச்சிக் கழகம் ஆனது அமைக்கப் படும்.
  • கோயம்புத்தூர், பெரம்பலூர், மதுரை, வேலூர் மற்றும் திருவள்ளூர் போன்ற மாவட்டங்களில் பரவலான ஒரு தொழில் வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் புதிய தொழில் பூங்காக்களை அரசு அமைக்க உள்ளது.
  • மின்னணுப் பொருட்கள் உற்பத்திக்காக வேண்டி பிள்ளைப்பாக்கம் மற்றும் மணலூரில் இரண்டு பிரத்தியேக உற்பத்தித் தொகுதிகள் உருவாக்கப்படும்.
  • போக்குவரத்தை எளிதாக்கவும், கனரக வாகனங்கள் நிறுத்துமிடங்களை முறைப் படுத்தவும் செய்யாறு மற்றும் கும்மிடிப்பூண்டி ஆகிய இடங்களில் சரக்குந்து முனைய வசதிகள் ஏற்படுத்தப்படும்.
  • பட்டியலிடப்பட்ட சாதி/பட்டியலிடப்பட்ட பழங்குடியினர் சமுதாயத்தினைச் சேர்ந்த தொழில் முனைவோருக்கு அரசு மேற்கொள்ளக் கூடிய கொள்முதலில் 5% ஒதுக்குவது தொடர்பான முன்னெடுப்பு மற்றொரு குறிப்பிடத்தக்க முயற்சியாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்