தமிழ்நாட்டின் கருர் மாவட்டத்தைச் சேர்ந்த மூன்று மாணவர்களால் உருவாக்கப் பட்ட இந்தியா சாட் (India Sat) என்ற சோதனை செயற்கைக்கோளானது நாசாவால் ஏவப்பட உள்ளது.
இது ஜூன் மாதத்தில் துணை சுற்றுப்பாதையில் அதன் ஆராய்ச்சி ஏவுகலன் 7 (sounding rocket 7) மூலம் விண்ணில் செலுத்தப் படும்.
அந்த மூன்று மாணவர்கள் தாந்தோன்றிமலையைச் சேர்ந்த எம். அட்னான், நாகம்பள்ளியைச் சேர்ந்த எம். கேசவன் மற்றும் தென்னிலையைச் சேர்ந்த வி.அருண் ஆகியோர் ஆவர்.
கியூப்ஸ் இன் ஸ்பேஸ் (Cubes in Space) திட்டத்தால் நடத்தப்பட்ட உலகளாவிய போட்டியின் ஒரு பகுதியாக வடிவமைக்கப்பட்ட பல செயற்கைக்கோள்களை இந்தச் செயற்கைக்கோள் மாதிரியானது விஞ்சியுள்ளது.
இது உலகின் மிகச்சிறிய மற்றும் இலகுவான செயற்கைக்கோள் எனக் கருதப் படுகிறது, இது வலுவூட்டப்பட்ட கிராபீன் பாலிமர் (reinforced graphene polymer) மூலம் 3 செ.மீ அளவு மற்றும் 64 கிராம் எடையைக் கொண்டுள்ளதாகும்.
இது சூரிய சக்தி ஆற்றலால் இயங்கும். மேலும் இது 13 உணர்விகள் பொருத்தப் பட்டு இருபதுக்கும் மேற்பட்ட அளவுருக்களை (parameters) கணக்கிட பயன்படுகிறது.
ஈர்ப்பு விசை, காந்த சக்தி, அண்டக் கதிர்வீச்சு ஆகியவை இதைப் பயன்படுத்தி அளவிடப்பட வேண்டிய அறிவியல் அளவுருக்கள் ஆகும்.
பூமியிலிருந்து விண்வெளிக்கு சமிக்ஞைகளை அனுப்பவும் பெறவும் இந்த செயற்கைக் கோளிடம் வானொலி அதிர்வெண் தொடர்பு (Radio frequency communication) உள்ளது என்று கூறப்படுகிறது.