தமிழ்நாடு நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள் 2023-24 ஆம் நிதி ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையினை 2023 ஆம் ஆண்டு மார்ச் 20 ஆம் தேதியன்று தாக்கல் செய்தார்.
2021-22 ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கை மதிப்பீட்டில் 4.33% ஆக குறிப்பிடப் பட்ட மாநிலத்தின் நிதிப் பற்றாக்குறையானது, 3.80% ஆக குறையும்.
2021 ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கை மதிப்பீட்டில் ரூ. 58,000 கோடியாக குறிப்பிடப் பட்ட ஒட்டு மொத்த வருவாய் பற்றாக்குறையானது ரூ.55,000 கோடியாக மதிப்பிடப் பட்டுள்ளது.
ரூ.62,000 கோடியாக இருந்த மாநிலத்தின் வருவாய்ப் பற்றாக்குறையானது ரூ.30,000 கோடி அளவிற்கு குறைக்கப் பட்டுள்ளது.
2024 ஆம் நிதியாண்டில் மாநிலத்தின் சொந்த வரி வருவாய் ஆனது ரூ.1.5 லட்சம் கோடியாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது.
இது நடப்பு நிதியாண்டில் ரூ.1.4 லட்சம் கோடியாக இருந்தது.
தமிழக அரசானது, வரும் செப்டம்பர் 15 ஆம் தேதி முதல் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 நிதியுதவியினை வழங்கவுள்ளது.
இந்த உதவித் தொகையானது அதிகாரப்பூர்வமாக தமிழில் 'மகளிர் உரிமைத் தொகை' அதாவது 'பெண்களுக்கான உதவி பெறும் உரிமை' என்று பொருள்படும் வகையில் அழைக்கப் படுகிறது.
இதற்கான ஒதுக்கீடு இந்த ஆண்டு 7000 கோடி ரூபாய்கள் ஆகும்,
2023-24 ஆம் நிதியாண்டு முதல் 30,122 என்ற எண்ணிக்கையிலான அனைத்து அரசுத் தொடக்கப் பள்ளிகளுக்கும் இலவச காலை உணவுத் திட்டமானது விரிவுபடுத்தப்படும்.
எண்ணும் எழுத்தும் திட்டம் ஆனது ஐந்தாம் வகுப்பு வரை நீட்டிக்கப் படும்.
ரூ. 1000 கோடி செலவில் வடசென்னை மேம்பாட்டுத் திட்டமானது தொடங்கப்படும்.
மரக்காணத்தில் சர்வதேசப் பறவைகள் மையமானது அமைக்கப்படும்.
மாற்றுத் திறனாளிகளுக்கான மாதாந்திர நிதி உதவியானது ரூ.1,500 ஆக உயர்த்தப் பட்டுள்ள நிலையில், கடுமையாகப் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கான மாதாந்திர நிதி உதவியானது ரூ.2000 ஆக உயர்த்தப் பட்டுள்ளது.
தங்கம் மற்றும் கல்விக் கடன்களைத் தள்ளுபடி செய்வதற்காக ரூ.3,993 கோடி நிதி ஒதுக்கப் பட்டுள்ளது.
இந்த ஆண்டில் மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.30,000 கோடி வங்கிக் கடன் வழங்க தமிழக அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.
தமிழகத்தின் மேற்கு மண்டலத்தில், சேலத்தில் புதிய ஜவுளிப் பூங்கா ஒன்றினை தமிழக அரசு நிறுவ உள்ளது.
தமிழ்நாடு அரசானது, அம்பத்தூரில் "தமிழ்நாடு உலகப் புத்தாக்கம் மற்றும் திறன் பயிற்சி வழங்கீட்டு மையம்" (TN-WISH) என்ற உலகத் தரம் வாய்ந்த திறன் மேம்பாட்டு மையத்தினை நிறுவ உள்ளது.
தஞ்சாவூரில் பிரம்மாண்ட சோழர் அருங்காட்சியகம் ஒன்று அமைக்கப்படும்.
2030ஆம் ஆண்டிற்குள் 14,500 மெகாவாட் மின்சாரத்தினை உற்பத்தி செய்யும் வகையில் மாபெரும் மின் நிலையத்தினை உருவாக்குவதற்காக ரூ.77,000 கோடி நிதி ஒதுக்கப் பட்டுள்ளது.
அதிநவீன உலக விளையாட்டுத்துறை நகரம் ஆனது சென்னையில் அமைக்கப்படும்.
ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலன், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப் பட்டோர் மற்றும் அறிவிக்கப்பட்டச் சமூகங்கள் மற்றும் வனப்பிரிவு உள்ளிட்ட பல்வேறு துறைகளின் கீழ் செயல்படும் அனைத்துப் பள்ளிகளும், பள்ளிக் கல்வித் துறையின் கீழ் ஒருங்கிணைக்கப்படும்.
குடிமைப் பணித் தேர்வின் முதல்நிலைத் தேர்வுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு 10 மாதங்களுக்கு மாதம் ரூ. 7,500 வழங்கப்படும்.
முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு மொத்தமாக ரூ. 25,000 வழங்கப் படும்.
பட்டியலிடப்பட்ட சாதியினர்/ பழங்குடியினர் சார்ந்த தொழில்முனைவோரின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவதற்காக வேண்டி, ‘அண்ணல் அம்பேத்கர் வணிக வாகையர் திட்டம்’ என்ற புதிய திட்டமானது தொடங்கப் படும்.
கணினியில் தமிழ்மொழிப் பயன்பாட்டினைப் பிரபலப்படுத்தச் செய்வதற்காக என்று தமிழக அரசானது சர்வதேச தமிழ்க் கணினி மாநாட்டினை நடத்த உள்ளது.
தமிழ்நாட்டினை உலகளாவிய தகவல் தொழில்நுட்பம்/ தகவல் தொழில்நுட்பம் மூலம் வழங்கப்படும் சேவை மையமாக மேம்படுத்துவதற்காக, சென்னை, கோயம்புத்தூர் மற்றும் ஓசூர் ஆகிய நகரங்களில் ‘தமிழ்நாடு தொழில்நுட்ப நகரம்’ (TNTech City) ஆனது அமைக்கப்படும்.
மேலும் வயது முதிர்ந்த 591 தமிழ் அறிஞர்களுக்கு இலவசப் பேருந்துப் பயணச் சலுகை திட்டம் விரிவுபடுத்தப்படும்.
நீலகிரி வரையாட்டினைப் பாதுகாக்கச் செய்யவும், அவற்றின் வளத்தினைக் காத்திட செய்வதற்காகவும் ரூ. 10 கோடி செலவில் 'நீலகிரி வரையாடு திட்டம்' ஆனது முதன் முறையாக தமிழகத்தில் தொடங்கப் படும்.
பள்ளிக் கல்வித் துறைக்கு ரூ.40,229 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
அவிநாசி சாலை மற்றும் சத்தியமங்கலம் சாலையை உள்ளடக்கியப் பகுதிகளுக்கு ரூ.9000 கோடி மதிப்பீட்டில் கோயம்புத்தூர் மெட்ரோ இரயில் சேவை தொடங்கப்படும்.
திருமங்கலம் - ஒத்தக்கடை இடையேயான மெட்ரோ இரயில் சேவையானது ரூ.8500 கோடி மதிப்பீட்டில் தொடங்கப்படும்.
கோயம்புத்தூர் மற்றும் மதுரை ஆகிய இரு நகரங்களின் திட்டமிட்ட மேம்பாட்டிற்காக எழில்மிகு கோயம்புத்தூர் மற்றும் மா மதுரை ஆகிய திட்டங்கள் செயல்படுத்தப்படும்.
2030 ஆம் ஆண்டிற்குள் மேலும் 33000 மெகாவாட் உற்பத்தியினைச் சேர்ப்பதன் மூலம் ஏற்கனவே நிறுவப்பட்ட மின் உற்பத்தித் திறனை இரட்டிப்பாக்குவதற்கும், 2030 ஆம் ஆண்டிற்குள் பசுமை ஆற்றலின் பங்கை 50 சதவீதமாக உயர்த்துவதற்கும் இலக்கு நிர்ணயிக்கப் பட்டுள்ளது.
விருதுநகர், வேலூர், கள்ளக்குறிச்சி மற்றும் கோயம்புத்தூரில் புதிய சிப்காட் தொழிற் பூங்கா அமைக்கப்படும்.
ஈரோட்டில் தந்தை பெரியார் வனவிலங்குச் சரணாலயம் என்ற புதிய வனவிலங்குச் சரணாலயம் அமைக்கப்பட உள்ளது.
தமிழகத்தில் நிறுவப்பட உள்ள இந்தப் புதிய சரணாலயம் ஆனது மாநிலத்தின் 18 வது சரணாலயம் ஆகும்.
இந்தி மொழித் திணிப்புக்கு எதிராகப் போராடி தமிழ் மொழியினைக் காப்பதற்காக உயிர்த் தியாகம் செய்த தமிழ் மொழிப் போர் தியாகிகள் திருவாளர்கள் தாளமுத்து மற்றும் நடராஜன் ஆகியோரின் நினைவாக சென்னையில் நினைவிடம் அமைக்கப் படும்.
கிண்டியில் உள்ள கிங் நோய்த்தடுப்பு மற்றும் ஆய்வு மைய வளாகத்தில் கட்டமைக்கப் பட்டு வரும் 1,000 படுக்கைகள் கொண்ட கலைஞர் நினைவுப் பல்நோக்குச் சிறப்பு மருத்துவமனை இந்த ஆண்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வரும்.
செங்கல்பட்டு, திருநெல்வேலி, ஈரோடு உள்ளிட்ட 3 இடங்களில் புதிய டைடல் தொழில் நுட்பப் பூங்காக்கள் விரிவுப்படுத்தப்படும்.
மதுரையில் நிறுவப்பட்டு வரும் கலைஞர் நினைவு நூலகம் ஆனது 2023 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் திறக்கப்படும்.
பத்திரப் பதிவுக் கட்டணத்தினை 2 சதவீதமாகக் குறைக்க மாநில அரசு முடிவு செய்து உள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள SIPCOT தொழில் பூங்காவில் அதிநவீனத் திறன் மேம்பாட்டு மையம் அமைக்கப்படும்.
சிறந்த இணைய இணைப்பை ஏற்படுத்தவும், மலிவு விலையில் பல்வேறு எண்ணிமச் சேவைகளை வழங்கவும், மாநிலத் தலைமையகம் முதல் அனைத்து மாவட்டங்களுக்கும் அதிவேக ஒளியிழை வலையமைப்பினை உருவாக்கச் செய்யும் வகையிலான "ஒருங்கிணைந்த எண்ணிம உள்கட்டமைப்பு" என்ற ஒன்றை அரசாங்கம் அமைக்க உள்ளது.
தமிழ்நாடு அரசானது கடலோரச் சுற்றுச்சூழல் அமைப்பில் ஏற்படும் பருவநிலை மாறுபாடுகளின் விளைவுகளைத் தணிப்பதற்காக வேண்டி, தமிழ்நாடு கடற்கரை மறு சீரமைப்புத் திட்டத்தினை அறிவித்துள்ளது.
அடுத்த ஐந்தாண்டுகளில் ரூ. 2,000 கோடி மதிப்பீட்டில் உலக வங்கி உதவியுடன் செயல் படுத்தப்பட உள்ள இந்தத் திட்டமானது, கடல் அரிப்பைத் தடுத்தல், கடல் மாசுபாட்டை குறைத்தல் மற்றும் கடல்சார் பல்லுயிர்த் தன்மையினைப் பாதுகாத்தல் போன்ற கொள்கைகளை நோக்கமாகக் கொண்டுள்ளது.
சென்னை, ஆவடி, தாம்பரம், கோயம்புத்தூர், மதுரை, திருச்சிராப்பள்ளி மற்றும் சேலம் ஆகிய நகரங்களில் முக்கியப் பொது இடங்களில் இலவச வைஃபை (Wi-Fi) சேவை வழங்கப் படும்.