தமிழ்நாடு நிதிநிலை அறிக்கையின் முக்கிய அறிவிப்புகள்
March 15 , 2025 18 days 109 0
அடுத்த இரண்டு ஆண்டுகளில், சுமார் 20 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு அவர்களின் விருப்பத் தேர்வின் அடிப்படையில் வரைப்பட்டிகை அல்லது மடிக்கணினி வழங்கப் படும்.
2025 ஆம் ஆண்டு ஏப்ரல் 01 ஆம் தேதி முதல், பெண்களின் பெயரில் 10 லட்சம் வரை மதிப்புள்ள சொத்துக்கள் பதிவு செய்யப்பட்டால் 1% குறைவான பத்திர வரி விதிக்கப் படும்.
பெற்றோர் இருவரையும் இழந்த குழந்தைகள் தங்கள் கல்வியைத் தொடர 2,000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும்.
கீழடி (சிவகங்கை), தெலுங்கனூர் (சேலம்), ஆதிச்சனூர் (கள்ளக்குறிச்சி) மற்றும் நாகப்பட்டினம் உள்ளிட்ட 8 இடங்களில் தொல்பொருள் அகழ்வாராய்ச்சிகள் இனிமேல் மேற்கொள்ளப் பட உள்ளன.
கலைஞர் வீட்டு வசதித் திட்டத்தின் கீழ், 3,500 கோடி ரூபாய் செலவில் 1 லட்சம் வீடுகள் கட்டப்படும்.
சென்னைக்கு அருகில் சுமார் 2000 ஏக்கருக்கும் அதிகமான பரப்பளவில் ஒரு புதிய நகரம் உருவாக்கப்பட உள்ளது.
அரசுப் பள்ளிகளின் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக 1,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
மிகவும் அதிகரித்து வரும் சுற்றுலாப் பயணிகளின் வருகையைக் கருத்தில் கொண்டு, இராமநாதபுரம் மாவட்டத்தின், இராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் நிறுவப் பட உள்ளது.
தமிழ்நாட்டில் சுமார் 1.50 லட்சம் தொழிலாளர்களுக்கு தொகுப்புக் காப்பீட்டுத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
மதுரை, கோயம்புத்தூர், திருச்சி, சேலம், திருப்பூர், ஈரோடு, தூத்துக்குடி, வேலூர், தஞ்சாவூர் மற்றும் திண்டுக்கல் ஆகிய இடங்களில் 10 கோடி ரூபாய் செலவில் ‘அன்புச்சோலை’ எனும் முதியோர் இல்லங்கள் அமைக்கப்பட உள்ளன.
அருகி வரும் உயிரினங்கள் வளங்காப்பு நிதியிலிருந்து 1 கோடி ரூபாய் செலவில் வேட்டைப் பறவை ஆராய்ச்சி அறக்கட்டளை நிறுவப்படும்.
இதுவரையில் 28 இந்திய மொழிகளிலும் 35 உலக மொழிகளிலும் திருக்குறள் மொழி பெயர்க்கப் பட்டுள்ளது.
மூன்று ஆண்டுகளுக்குள் ஐக்கிய நாடுகள் சபையினால் அங்கீகரிக்கப்பட்ட சுமார் 193 அதிகாரப் பூர்வ மொழிகளிலும் திருக்குறள் கிடைக்கப் பெறச் செய்யும் வகையில், இதனை மொழிபெயர்க்க 133 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
ஈரோட்டில் கொடுமணல் அகழ்வாராய்ச்சிகளை மையமாகக் கொண்ட ‘நொய்யல் அருங்காட்சியகம்’ மற்றும் இராமநாதபுரத்தில் ‘நாவாய் அருங்காட்சியகம்’ ஆகிய இரண்டு புதிய அருங்காட்சியகங்கள் நிறுவப்படும்.
'உலகத் தமிழ் ஒலிம்பியாட்' போட்டியானது ஆண்டுதோறும் மாணவர்களுக்கு கணினி அடிப்படையிலான தேர்வாக உலகளவில் நடத்தப்படும் என்பதோடு இதில் முன்னணி இடங்களைப் பெறுபவர்களுக்கு 1 கோடி ரூபாய் பரிசளிக்கப்படும்.
தமிழின் தொன்மையை வெளிப்படுத்துவதற்காக மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தில் ‘அகரம் - மொழிகளின் அருங்காட்சியகம்’ நிறுவப்படும்.